மாரடைப்புக்குப் பிறகு – அடுத்து என்ன?
"இந்தியாவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் மாரடைப்புக்கு பலியாகிறார்" - டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மாரடைப்பு மிகுந்த வலி மற்றும் பயத்தை ஏற்படுத்தக்கூடும். பெரும்பாலானவர்கள் அது தங்களுக்கு ஏற்படாது என்ற மாய எண்ணத்தில் இருக்கவே விரும்புகிறார்கள்… அது தங்களுக்கு ஏற்படும் வரை.
மாரடைப்பு என்பது குடும்பத்தினர் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும். ஆனால், பலர் தங்கள் முதல் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்து வழக்கமான, பயனுள்ள வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது ஆறுதலான விஷயம். இருந்தாலும், உங்கள் உடல் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியை விடுத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையிலும் வாழ்க்கைமுறையிலும் பொருத்தமான மாற்றங்களைச் செய்வது முக்கியம்.
மாரடைப்பிலிருந்து மீள்வது என்பது, அதன் தீவிரத்தன்மை மற்றும் எவ்வளவு விரைவாக அதற்கான சிகிச்சை பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, எதிர்காலத்தில் மேலும் தாக்குதல்கள் ஏற்படுவதைத் தடுக்க, இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறையைத் திட்டமிட்டு, அதை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.
ஹார்ட் அட்டாக் - கோல்டன் ஹவர்
மாரடைப்பிற்குப் பின்பான முதல் 60 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. மாரடைப்பு ஏற்பட்ட 2-4 மணி நேரங்களுக்குள் முக்கியமான மருத்துவ சிகிச்சையை நோயாளி பெறும் பட்சத்தில், தசைக்கு நிரந்தர சேதம் ஏற்படுவதைத் தடுக்கலாம். 6 மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் பட்சத்தில், தசைக்கு நிரந்தர சேதம் ஏற்படக்கூடும். ஆனால் 12 மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் பட்சத்தில், மீட்க முடியாத வகையிலான சேதம் ஏற்படக்கூடும். மாரடைப்பின் அறிகுறிகளைக் கண்டறிந்து, கூடிய விரைவில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதே நாம் இதிலிருந்து அறிந்து கொள்ளும் பாடம்.
மாரடைப்பின் அறிகுறிகளை கண்டறிதல்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்புகளும் அறிகுறிகளும் வேறுபடும். ஆண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான அறிகுறி மார்பு வலி, ஆனால் பெண்களிடையே காணப்படும் சில பொதுவான அறிகுறிகள் மூச்சுத் திணறல், குமட்டல்/வாந்தி மற்றும் முதுகு அல்லது தாடை வலி போன்றவை ஆகும்.
சரி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, மாரடைப்புக்குப் பிறகு, சில நாட்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுவீர்கள். நீங்கள் இனி மருத்துவமனையில் இருக்க வேண்டியதில்லை என்று மருத்துவர் கருதினால், உங்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதுடன், வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்த ஆலோசனையும் வழங்கப்படும், அத்துடன் வழக்கமான பின்தொடர்தல் சோதனைகளும் செய்யப்படும்.
மாரடைப்பிற்குப் பிறகு எண்ணற்ற உணர்ச்சிகளைக் கடந்து செல்வது சாதாரணமாக நிகழ்வது தான். பலருக்கு வீடு திரும்பியதும் பயம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. உங்களுக்கும் அது ஏற்படலாம். இதன் காரணமாக மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்திய வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். இந்த உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். இவற்றைச் சமாளிக்க, உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள், தேவைப்பட்டால் தொழில்முறை ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.
மருத்துவமனையில் என்ன நடக்கும்?
- தாக்குதலின் தீவிரத் தன்மையைப் பொறுத்து, நீங்கள் 3-5 நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க நேரலாம்.
- முதல் 48 மணி நேரங்கள் முக்கியமானவை, காவேரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சி-பெற்ற மற்றும் அனுபவம்-வாய்ந்த வல்லுனர்கள் குழுவுடன்கூடிய கரோனரி கேர் யூனிட்டில் நோயாளி சேர்க்கப்படுவார்.
- இதய செயல்பாடு மற்றும் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு போன்ற பிற முக்கிய அளவுருக்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்.
- நோயாளியின் நிலை ஸ்திரமாகும் பட்சத்தில், அவர் வார்டுக்கு மாற்றப்பட்டு அடுத்த சில நாட்களுக்கு கண்காணிக்கப்படுவார். இந்த நேரத்தில் பார்வையாளர்களை முற்றிலும் தவிர்ப்பது அல்லது அவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது நல்லது.
- நோயாளியுடன் இருக்கும் குடும்ப உறுப்பினர் அவருக்குத் தேவையான உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவதுடன், மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு நிபுணர்களுடன் இணங்கி ஒத்துழைக்க வேண்டும்.
- பராமரிப்பாளர் விழிப்புடன் இருந்து நோயாளியின் அறிகுறிகளை தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும் – ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக செவிலியர் அல்லது உதவி ஊழியர்களை அணுக வேண்டும்.
டிஸ்சார்ஜ் மற்றும் வீட்டில் பராமரிப்பு
- உங்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகளைக் கேட்டு, எல்லா சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளத் தயங்காதீர்கள்
- மருந்துகள் (புதிய மற்றும் வழக்கமான மருந்துகள்) வழங்க வேண்டிய அட்டவணையைப் புரிந்து கொள்ளுங்கள்
- முதல் சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுங்கள். அவசியம் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில், ஒரு பராமரிப்பாளரை நியமித்துக் கொள்ளுங்கள்
- டிஸ்சார்ஜ் சம்மரியை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
- 3 வாரங்களுக்குப் பிறகு, உங்கள் நடைப்பயண நேரத்தை நீங்கள் படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம், அத்துடன் தேநீர் தயாரித்தல், சமையல் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற லேசான வேலைகளைச் செய்யலாம்.
- 4 வது வாரத்திற்குப் பிறகு, உங்கள் மருத்துவருடன் பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, லேசான தோட்ட வேலைகள், நீண்டதூர நடைப்பயணம் மற்றும் நீச்சல் போன்ற தீவிரம் அதிகமான செயல்களில் நீங்கள் படிப்படியாக ஈடுபடலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
- உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்க்கவும்.
- முழு கோதுமை தானியங்கள், பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சேர்க்கவும்.
- பேரிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களைச் சேர்க்கவும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், ஆப்பிள், பெர்ரி மற்றும் சாத்துக்குடி போன்ற குறைந்த சர்க்கரை அளவுள்ள பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
- அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள், உங்கள் உணவில் தினமும் முளைகட்டிய பயறுகளுடன்கூடிய சாலட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் கேரட் மற்றும் ப்ரோக்கோலியை அதிகம் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
- உங்கள் உணவில் வெந்தய விதைகளை அதிகம் சேர்க்கவும், ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- உப்பு உட்கொள்ளும் அளவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
- நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், விலங்கு இறைச்சியை (ரெட் மீட்) தவிர்த்து, வாரத்திற்கு 2-3 முறை மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- இதயத்திற்கு ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற, ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை நாடும்படி உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம்.
காவேரி மருத்துவமனையின் இதய மறுவாழ்வுத் திட்டத்தில் சேருங்கள்
- டிரெட்மில், பைக் ரோயிங் மெஷின் அல்லது வாக்கிங்/ஜாகிங் டிராக்கைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் அறிகுறிகளில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று ஒரு சுகாதார நிபுணர் கண்காணிப்பார்.
- மருத்துவ மேற்பார்வையின் கீழ் வலிமைப் பயிற்சியை மெதுவாகத் தொடங்குங்கள், காலப்போக்கில் உங்களுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.
- அறிவியல் பூர்வமாகவும், மேற்பார்வையின் கீழும் செய்வதன் மூலம், மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவதுடன், உடல் எடையைக் குறைத்து, வழக்கமான செயல்பாடுகளைத் தொடரலாம் மற்றும் நன்றாகச் சாப்பிடலாம்.
மருந்துகளைப் பொறுத்தவரை செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
- உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, அவரது அறிவுறுத்தல்களின்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
- OTC மருந்துகளை (மருந்துச்சீட்டு இல்லாமல் வாங்கும் மருந்துகள்) வாங்கும் போது காலாவதி தேதிகளை சரிபார்க்கவும்.
- உங்கள் மருந்து கொள்கலனில் உள்ள லேபிளைப் படிக்கவும்.
- நீங்கள் நன்றாக உணர்ந்தாலும், மருத்துவரைக் கேட்காமல் நீங்களாக எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.
- சந்தேகம் இருக்கும் பட்சத்தில், உங்கள் மருந்துகளை எப்படி சேமிப்பது என்பது குறித்து உங்கள் மருத்துவரிடமோ அல்லது மருந்தாளரிடமோ கேட்கத் தயங்காதீர்கள்
நேர்மறையான கண்ணோட்டம், விடாமுயற்சி மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம், மாரடைப்பிலிருந்து மீள்வது சாத்தியமே. உங்களுக்கு உதவ எங்கள் இருதயநோய் நிபுணர்கள் குழு எப்போதும் தயாராக இருக்கும்.
- Oct 31, 2023