மெனோபாஸ் - ஹார்மோன் மாற்றங்களைச் சமாளிக்க வாழ்க்கைமுறை மாற்றங்கள்
ஹார்மோன்கள் பற்றி…
பெண்களின் உடல்கள் தனித்துவமானவை - அவை வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அளவுகளில் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. பெண்களுக்கு தோராயமாக 12 வயதில் மாதவிடாய் தொடங்குகிறது, அப்போது அவர்களின் உடல் லுடினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் ஃபாலிக்கில் தூண்டுதல் ஹார்மோன் (FSH) ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இவை உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியைத் தொடங்குகின்றன. ஈஸ்ட்ரோஜன் என்பது முட்டை ஃபாலிக்கில்களை கருமுட்டையாக முதிர்ச்சியடையச் செய்யும் ஒரு ஹார்மோன் ஆகும், இது கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம். அதே சமயத்தில் எண்டோக்ரைன் அமைப்பு புரோஜெஸ்ட்டிரோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது, இது கருவுற்ற முட்டையை பொருத்துவதற்கு கருப்பை லைனிங்கை தயார் செய்கிறது. முக்கிய "ஆண்" ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனையும் பெண்களின் உடல் ஒரு சிறிய அளவில் உற்பத்தி செய்கிறது. நல்ல எலும்பு அடர்த்தி, தசை வலிமை மற்றும் பாலியல் உந்துதலுக்கு டெஸ்டோஸ்டிரோன் பங்களிக்கிறது. இந்த ஹார்மோன்கள் அனைத்தும் சரியான அளவில் சமநிலையில் இருந்தால், பெண்களின் கருவுறுதல் மற்றும் உடல் ஆரோக்கியம் அசௌகரியமில்லாமல், வலியில்லாமல் இருக்கும்.
மெனோபாஸ்(மாதவிடாய் நிறுத்தம்) என்றால் என்ன?
மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு கட்டமாகும். இந்தக் கட்டத்தில் அவளது மாதாந்திர மாதவிடாய் நின்றுவிடுகிறது. பெண் ஹார்மோன்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக இது நிகழ்கிறது. அப்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தி குறைகிறது. மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய நிலைமாற்ற கட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாயை அனுபவிக்கிறார்கள். சில கட்டங்களில் மாதவிடாய் ஏற்படாமல் போகலாம், அதன் பிறகு அடிக்கடி மாதவிடாய் ஏற்படலாம், அதிக இரத்தப்போக்கும் ஏற்படலாம். ஹார்மோன்களின் சமநிலை மாறும் இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் உடல் மீண்டும் சமநிலைக்கு வர சிறிது காலம் எடுக்கும். பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது நிகழ்கிறது, இருப்பினும் 30களின் பிற்பகுதியில் உள்ள பெண்களுக்கும் மாதவிடாய் நிறுத்தம் மிகவும் முன்னதாகவே ஏற்படலாம்.
பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலகட்டத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்ன?
குறைவான அண்டவிடுப்பு தான் இந்த மாற்றத்தின் தொடக்கம், அதாவது பெண்களின் மாதவிடாய் சுழற்சிக் காலம் நீண்டதாக இருக்கும். அதாவது, 28 முதல் 30 நாட்களுக்கு பதிலாக, 45 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படலாம். மேலும் மாதவிடாய் சுழற்சிகள் ஒழுங்கின்றி இருக்கலாம், உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறையலாம். ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவதால் ஹாட் ஃப்ளாஷ்கள் மற்றும் இரவுநேர வியர்வை தோன்ற ஆரம்பிக்கும். உடல் தன் வெப்பநிலையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறனை இது பாதிக்கிறது. மேலும் மனநிலை ஏற்ற இறக்கங்கள், பாலியல் உந்துதலில் ஏற்படும் மாற்றங்கள், கவனம் செலுத்துவதில் அல்லது விஷயங்களை நினைவில் கொள்வதில் சிரமம் மற்றும் நிம்மதியான தூக்கத்தில் சிரமம் ஆகிய அறிகுறிகளும் தோன்றலாம். யோனி வறட்சி, மூட்டு வலி, தசை வலிகள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வறண்ட சருமம், முடி உதிர்தல் மற்றும் தலைவலி ஆகியவை பிற பொதுவான உடல் அறிகுறிகளாகும். மாதவிடாய் நிறுத்தத்திற்கு உள்ளாகும் பல பெண்கள் எரிச்சல் அடைதல், ஆற்றல் குறைதல் மற்றும் ப்ரெயின் ஃபாக் உள்ளிட்ட PMS போன்ற அறிகுறிகளையும் அனுபவிப்பதாகக் கூறுகின்றனர்.
மெனோபாஸ் அறிகுறிகளை மோசமாக்குவது எது?
மெனோபாஸ் ஏற்படக் காரணம் அல்லது அதன் விளைவுகள் ஆகியவை குறித்து பொதுவான தகவல்களை கூறுவது கடினம், ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹார்மோன்களின் கலவை தனித்துவமானதாக இருக்கும். இருப்பினும், மாதவிடாய் நிறுத்தத்திற்கு ஆளான பெரும்பாலான பெண்கள் நல்ல தூக்கம், மன அழுத்தத்தைத் தவிர்த்தல் போன்றவை நன்மை பயக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். காரமான உணவுகளை சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவை ஹாட் ஃப்ளாஷ்கள் மற்றும் இரவு வியர்வை அறிகுறிகளை மோசமாக்குகின்றன.
மெனோபாஸ் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா?
மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைத்து, உடலுக்கு சற்று சௌகரியம் வழங்க சில சிகிச்சைகள் உள்ளன:
ஹார்மோன் மாற்று சிகிச்சை - ஹார்மோன் மாற்று சிகிச்சை என்பது மாதவிடாய் நின்ற பெண்ணின் உடலில் இல்லாத ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனை இட்டு நிரப்பும் ஒரு சிகிச்சையாகும். இது பொதுவாக மாத்திரைகள், கிரீம்கள் அல்லது களிம்புகள் வடிவில் வழங்கப்படுகிறது. ஹார்மோன் மாற்று சிகிச்சையானது ஹாட் ஃப்ளாஷ்கள், இரவு வியர்வை, யோனி வறட்சி மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் எலும்பு அடர்த்தி இழப்பு அல்லது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் ஹார்மோன் மாற்று சிகிச்சை உதவுகிறது.
ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை - ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை ஹார்மோன் மாற்று சிகிச்சையைப் போன்றது, ஆனால் ஈஸ்ட்ரோஜன் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது. பெரும்பாலும் கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் ஒரு மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும், மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மெனோபாஸின் அசௌகரியமான அறிகுறிகளைக் குறைக்க என்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும்?
மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை நிர்வகிப்பதில் வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் பின்வருவன அடங்கும்:
உடற்பயிற்சி செய்யுங்கள் - மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலைக் கோளாறுகளை சமநிலைப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது நடனம் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.
உணவுமுறையை மாற்றுங்கள் - மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை அனுபவிக்கும் பெண்களுக்கு போதுமான புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட ஆரோக்கியமான, சீரான உணவு முக்கியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் மாதவிடாய் நிறுத்தத்தின் எதிர்மறை விளைவுகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும், சோயாபீன், ஆளி விதைகள், எள் விதைகள் மற்றும் பீன்ஸ் போன்ற பைட்டோஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகளை சாப்பிடும்படி அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவை பைட்டோஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையை சமாளிக்க உதவுகின்றன, இவை ஹாட் ஃப்ளாஷ்கள் மற்றும் இரவு வியர்வையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உண்பதை முடிந்தவரை குறைக்கவும், ஏனெனில் இவை இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சலுணர்வை மோசமாக்கும். காஃபினையும் (காபி போன்றவை) தவிர்க்கவும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் - ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் வறட்சி, மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மாதவிடாய் நிறுத்தத்தில் இருக்கும் பெண்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். நீரேற்றத்துடன் இருக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் ஒரு நாளைக்கு 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
நன்றாக தூங்குங்கள் – இரவில் நன்கு தூங்கி ஓய்வெடுப்பது மாதவிடாய் அறிகுறிகளை மேலும் சமாளிக்க உதவுகிறது. ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் நல்ல தரமான தூக்கம் பெற முயற்சிக்கவும். படுக்கைக்கு முன் சூடான, காஃபின் இல்லாத பானங்கள் குடிக்க முயற்சிக்கவும், தூங்கும் அறையின் சூழலை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும்.
மனரீதியாகவும் சமூகரீதியாகவும் சுறுசுறுப்பாக இருங்கள் - மாதவிடாய் நிறுத்த காலகட்டத்தை தனியாகக் கையாள்வது உங்களுக்கு கடினமான அனுபவமாக இருக்கலாம். நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நாடுங்கள், அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு இதமளித்து இந்த்க காலகட்டத்தை சிறப்பாக கையாள உதவும்.
இறுதியாக…
மெனோபாஸ் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டம், அது தொடர்பான சவால்கள் மற்றும் குழப்பங்கள் கண்டிப்பாக இருக்கும். ஒரு பெண்ணாகப் பிறப்பது ஆசீர்வாதம் ஆனால் சில அசௌகரியங்களும் இருக்கின்றன. நமது உடல், அதில் நடைபெறும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிந்து கொண்டு, அவற்றுக்குத் தக்க தீர்வுகளை நாடி மேற்கொண்டாலே, அந்த ஆசீர்வாதத்தை நாம் உணர்ந்து மகிழ்வுடன் அனுபவிக்கலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நீங்களே முன்னுரிமை அளித்து, உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்!
- Feb 28, 2025