செர்விகல் ஸ்போண்டிலோசிஸ் – காரணங்கள் மற்றும் சிகிச்சை
செர்விகல் ஸ்போண்டிலோசிஸ் என்பது உங்கள் கழுத்தில் உள்ள செர்விகல் முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் மற்றும் வட்டுகளை பாதிக்கும் ஒரு பொதுவான, பெரும்பாலும் முதுமை-தொடர்பான நிலை ஆகும். இது குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் தேய்மானம் மற்றும் பாதிப்பின் காரணமாக உருவாகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் ஏற்படக் காரணங்கள்
உங்கள் கழுத்தில் உள்ள எலும்புகள் மற்றும் பாதுகாப்பு குருத்தெலும்புகளின் தேய்மானம் மற்றும் பாதிப்பு ஸ்பான்டிலோசிஸுக்கு வழிவகுக்கும். இந்த நிலை ஏற்பட சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:
எலும்பு ஸ்பர்ஸ் (வளர்ச்சி)
முதுகெலும்பை வலுப்படுத்துவதற்காக எலும்புகளை நீட்டிக்க உடல் முயற்சிப்பதன் விளைவான வளர்ச்சி தான் இது. இந்த எலும்பு வளர்ச்சி முதுகெலும்பு மற்றும் நரம்புகள் போன்ற முதுகெலும்பின் நுட்பமான பகுதிகளில் அழுத்தி, இதன் விளைவாக வலி ஏற்படலாம்.
முதுகெலும்பு டிஸ்குகளின் நீரிழப்பு
உங்கள் முதுகெலும்புகளுக்கு இடையில் டிஸ்குகள்(வட்டுக்கள்) உள்ளன, அவை தடிமனான, மெத்தை போன்றவை. தூக்குதல், முறுக்குதல் மற்றும் பிற செயல்பாடுகளினால் ஏற்படும் அதிர்வை அவை எடுத்துக் கொள்கின்றன. இந்த டிஸ்குகளுக்குள் உள்ள ஜெல் போன்ற பொருள் காலப்போக்கில் உலர்ந்து விடக்கூடும். இதனால் உங்கள் எலும்புகள் (முதுகெலும்பு) அதிகமாக ஒன்றோடு ஒன்று உரசி, இது வலியை ஏற்படுத்தக்கூடும்.
ஹெர்னியேட்டட் டிஸ்க்குகள்
முதுகெலும்பு டிஸ்குகளில் விரிசல்கள் உருவாகலாம், இது உள்ளே உள்ள மெத்தை போன்ற பொருளின் கசிவை ஏற்படுத்துகிறது. இந்த பொருள் முதுகெலும்பு மற்றும் நரம்புகளில் அழுத்தும் போது, அதன் விளைவாக கை உணர்வின்மை மற்றும் கீழ்-நோக்கி செல்லும் கைவலி போன்றவை ஏற்படுகின்றன.
தொடர்புடைய வலைப்பதிவு: Herniated Disk: When Is Surgery Needed?
காயம்
உங்கள் கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்தால் (உதாரணமாக, கீழே விழுதல் அல்லது கார் விபத்தினால்).
தசைநார் விறைப்பு
உங்கள் முதுகெலும்புகளை ஒன்றோடொன்று இணைக்கும் கடினமான நார்கள் காலப்போக்கில் இன்னும் இறுகலாம், இது உங்கள் கழுத்தின் செயல்பாட்டைப் பாதித்து, கழுத்தை இறுக்கமாக உணர வைக்கிறது.
அதிகப்படியான பயன்பாடு
சில தொழில்கள் அல்லது பொழுதுபோக்குகளின் காரணமாக ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது கனமான பொருட்களை தூக்க வேண்டியிருக்கலாம் (கட்டுமான வேலை போன்றவை). இது முதுகெலும்பின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இதன் விளைவாக விரைவிலேயே தேய்மானம் மற்றும் பாதிப்பு ஏற்படுகிறது.
செர்விகல் ஸ்பான்டிலோசிஸிற்கான ஆபத்து காரணிகள்
செர்விகல் ஸ்பான்டிலோசிஸிற்கான மிகப்பெரிய ஆபத்து காரணி முதுமை.
அதைத் தவிர உள்ள வேறு காரணிகள் பின்வருமாறு:
- கழுத்தில் ஏற்பட்டிருக்கும் காயங்கள்
- கனமான பொருட்களைத் தூக்குதல் போன்ற வேலை-தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக உங்கள் கழுத்திற்கு ஏற்படும் கூடுதல் சிரமம்
- நீண்ட நேரம் உங்கள் கழுத்தை அசௌகரியமான நிலையில் வைத்திருத்தல் அல்லது நாள் முழுவதும் ஒரே கழுத்து செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் செய்தல் (தொடர்ச்சியான அழுத்தம்)
- மரபணு காரணிகள் (செர்விகல் ஸ்பான்டிலோசிஸ்-கான குடும்ப வரலாறு)
- புகை பிடித்தல்
- அதிக எடை மற்றும் அதிக செயல்பாடின்றி இருப்பது
செர்விகல் ஸ்பான்டிலோசிஸின் அறிகுறிகள்
சிலருக்கு அறிகுறிகள் தோன்றுவதே இல்லை;
பெரும்பாலானவர்களுக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இருப்பதில்லை. அறிகுறிகள் தோன்றினாலும், அவை லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் மற்றும் படிப்படியாக உருவாகலாம் அல்லது திடீரென்று ஏற்படலாம். மற்றவர்களுக்கு, இது நாட்பட்ட, கடுமையான வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தலாம். எப்படி இருந்தாலும், இந்த நிலை உள்ள பலரால் இயல்பான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது.
தோள்பட்டையைச் சுற்றியுள்ள வலி ஒரு பொதுவான அறிகுறியாகும். சிலர் புஜத்திலும் விரல்களிலும் வலி ஏற்படலாம்.
மற்றொரு பொதுவான அறிகுறி தசை பலவீனம். தசை பலவீனம் கைகளை உயர்த்துவதையோ அல்லது பொருள்களை உறுதியாகப் பிடிப்பதையோ கடினமாக்கலாம்.
பிற பொதுவான அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
- கழுத்து விறைப்பு மோசமடைதல்
- பெரும்பாலும் தலையின் பின்புறத்தில் ஏற்படும் தலைவலி
- முக்கியமாக தோள்கள் மற்றும் கைகளை பாதிக்கும் கூச்சஉணர்வு அல்லது உணர்வின்மை, இது கால்களிலும் ஏற்படலாம்
சமநிலை இழப்பு மற்றும் சிறுநீர்ப்பை அல்லது குடல் கட்டுப்பாடு இழப்பு ஆகியவை அரிதாக தோன்றும் அறிகுறிகள் ஆகும்
எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்
தோள்பட்டை, கைகள் அல்லது கால்களில் திடீரென உணர்வின்மை அல்லது கூச்சம் ஏற்பட்டாலோ, அல்லது குடல் அல்லது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்தாலோ, உங்கள் மருத்துவரிடம் பேசி, கூடிய விரைவில் மருத்துவ உதவியை நாடுங்கள். இது ஒரு மருத்துவ அவசரநிலை.
உங்கள் வலி மற்றும் அசௌகரியம் உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடத் தொடங்கினாலும் நீங்கள் மருத்துவரைப் பார்க்க விரும்பலாம்.
இந்த நிலைக்கான நோயறிதல் மற்றும் சோதனைகள்
முதலில், பிற சாத்தியமான நிலைகளான ஃபைப்ரோமயால்கியா போன்ற நிலைகள் இல்லை என்பது உறுதிசெய்து கொள்ளப்படும். செயல்பாட்டுச் சோதனைகள் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட நரம்புகள், எலும்புகள் மற்றும் தசைகள் தீர்மானிக்கப்படும்.
உங்கள் மருத்துவரே உங்கள் நிலைக்கு சிகிச்சையளிக்கலாம் அல்லது மேலதிக பரிசோதனைக்காக ஒரு எலும்பியல் நிபுணர், நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்கலாம்.
உடற்பரிசோதனை
- உங்கள் மருத்துவர் முதலில் உங்கள் அறிகுறிகள் குறித்து பல கேள்விகளைக் கேட்பார். பின்னர், பல சோதனைகளை மேற்கொள்வார்.
- பதில்வினை செய்யும் உங்கள் தன்மையைச் சோதித்தல், தசை பலவீனம் அல்லது உணர்ச்சிப் பற்றாக்குறையைச் சரிபார்த்தல் மற்றும் உங்கள் கழுத்தின் இயக்க வரம்பைச் சோதித்தல் போன்ற வழக்கமான சோதனைகள் செய்யப்படும்.
- நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பதையும் உங்கள் மருத்துவர் பார்க்க விரும்பலாம். உங்கள் நரம்புகள் மற்றும் முதுகெலும்பு அதிக அழுத்தத்தில் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க இவை அனைத்தும் உங்கள் மருத்துவருக்கு உதவும்.
- உங்களுக்கு செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் இருப்பதாக உங்கள் மருத்துவர் சந்தேகித்தால், நோயறிதலை உறுதிப்படுத்த இமேஜிங் சோதனைகள் மற்றும் நரம்பு செயல்பாடு சோதனைகளை செய்து கொள்ளும்படி அவர் கூறுவார்.
இமேஜிங் சோதனைகள்
- எலும்பு ஸ்பர்ஸ் மற்றும் பிற அசாதாரணங்களை சரிபார்க்க எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தலாம்.
- ஒரு CT ஸ்கேன் மூலம் உங்கள் கழுத்தின் விரிவான படங்களை பார்க்கலாம்.
- எம்ஆர்ஐ ஸ்கேன், பிஞ்ச் நரம்புகளைக் கண்டறிய உங்கள் மருத்துவருக்கு உதவுகிறது.
- மைலோகிராமில், உங்கள் முதுகெலும்பின் சில பகுதிகளை முன்னிலைப்படுத்த ஒரு சாய ஊசி பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதிகளின் விரிவான படங்களை வழங்க CT ஸ்கேன்கள் அல்லது எக்ஸ்-கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- உங்கள் தசைகளுக்கு சமிக்ஞைகளை அனுப்பும்போது உங்கள் நரம்புகள் சாதாரணமாக செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க எலக்ட்ரோமியோகிராம் (EMG) பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனை உங்கள் நரம்புகளின் மின் செயல்பாட்டை அளவிடுகிறது.
- நரம்பு கடத்தல் ஆய்வு நரம்பு அனுப்பும் சமிக்ஞைகளின் வேகத்தையும் வலிமையையும் சரிபார்க்கிறது. நரம்பு அமைந்துள்ள உங்கள் தோலில் எலக்ட்ரோடுகளை வைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.
செர்விகல் ஸ்பான்டிலோசிஸுக்கான சிகிச்சை
செர்விகல் ஸ்பான்டிலோசிஸிற்கான சிகிச்சைகள் வலி நிவாரணம் அளித்தல், நிரந்தர சேதத்தின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் இயல்பான வாழ்க்கை நடத்த உதவுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
உடற்செயல்பாட்டுச் சிகிச்சை (பிசியோதெரபி)
உங்கள் மருத்துவர் உங்களை ஒரு உடற்செயல்பாட்டுச் சிகிச்சையாளரிடம் சிகிச்சைக்காக அனுப்பலாம். உடல் சிகிச்சை உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை நீட்ட உதவுகிறது. அவற்றை பலப்படுத்தி, வலியைப் போக்க உதவுகிறது.
உங்களுக்கு கழுத்து டிராக்ஷன் கூட போடப்படலாம். இதில், செர்விகல் மூட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கவும், செர்விகல் டிஸ்குகள் மற்றும் நரம்பு வேர்கள் மீதான அழுத்தத்தை குறைக்கவும் எடை பயன்படுத்தப் படுகிறது.
மருந்துகள்
மருந்துக்கடையில் வாங்கும் ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகள் குணம் அளிக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் வேறு சில மருந்துகளை பரிந்துரைக்கலாம். அவற்றில் இவை அடங்கும்:
- தசைப்பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க தசை தளர்த்திகள்
- நரம்பு சேதத்தால் ஏற்படும் வலியை நிவர்த்தி செய்ய வலி நிவாரண மருந்துகள்
- திசு அழற்சியைக் குறைப்பதற்கும், வலியைக் குறைப்பதற்கும் ஸ்டீராய்டு ஊசி
- அழற்சியைக் குறைக்க மருந்து ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID கள்)
அறுவை சிகிச்சை
செர்விகல் ஸ்பான்டிலோசிஸுக்கு அறுவை சிகிச்சை பொதுவாக தேவைப்படுவதில்லை, ஆனாலும் உங்கள் நிலை கடுமையானதாக இருந்தால் மற்றும் பிற வகையான சிகிச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், உங்கள் மருத்துவர் அதை பரிந்துரைக்கலாம். இது உங்கள் முதுகெலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக இடம் கொடுக்க எலும்பு ஸ்பர்ஸ், உங்கள் கழுத்தின் எலும்புகளின் பகுதிகள் அல்லது ஹெர்னியேடட் டிஸ்குகளை அகற்றுவதை உள்ளடக்கியது.
வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சைகள்
உங்கள் நிலை லேசானதாக இருந்தால், அதற்கு சிகிச்சையளிக்க நீங்கள் வீட்டிலேயே சில விஷயங்களை முயற்சி செய்யலாம்:
- மருந்துக் கடையில் கிடைக்கும் வலி நிவாரணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
- புண் தசைகளுக்கு வலி நிவாரணம் வழங்க உங்கள் கழுத்தில் வெப்பமூட்டும் பேட் அல்லது குளிர் பேக்-ஐப் பயன்படுத்தவும்.
- விரைவாக குணமடைய தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- தற்காலிக நிவாரணம் பெற மென்மையான கழுத்து பிரேஸ் அல்லதுமென்மையான காலர்அணியுங்கள். கழுத்து பிரேஸ் அல்லது காலரை நீங்கள் நீண்ட நேரம் அணியக்கூடாது, ஏனென்றால் இது உங்கள் தசைகளை பலவீனமாக்கும்.
செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் என்பது கழுத்து வலி தொடர்பான விறைப்பு, அசௌகரியம் மற்றும் தலைவலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொதுவான மற்றும் பெரும்பாலும் முதுமை-தொடர்பான நிலை.
உங்கள் மருத்துவரால் உங்களுக்கு பூரண குணம் வழங்க முடியாமல் போகலாம், ஆனால் உங்களின் அசௌகரியத்தையும் வலியையும் சமாளிக்க அவர்கள் பெரும்பாலும் வழக்கமான சிகிச்சைகளையே பரிந்துரைக்கிறார்கள்.
ஆங்கில வலைப்பதிவு: Causes, Symptoms and Treatment of Cervical Spondylosis
- Dec 13, 2023