காக்க… காக்க கல்லீரல் காக்க!
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி சர்வதேச கல்லீரல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காவேரி மருத்துவமனை பொதுமக்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூம் வாயிலாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களின் சந்தேகங்களுக்கான விளக்கங்களை சேலம் காவேரி மருத்துவமனை கல்லீரல் சிகிச்சை அறுவை மருத்துவர் ரவிக்குமார், சென்னை காவேரி மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் சம்பந்தம் ஆகியோர் வழங்கினர்.
மருத்துவமும் அறுவை சிகிச்சைக்கான மஞ்சள் காமாலையும் (Medical and Surgical jaundice) என்ற தலைப்பில் கல்லீரல் அறுவை சிகிச்சை மருத்துவர் ரவிக்குமார் அவர்கள் உரையாற்றியதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக…
மஞ்சள் காமாலையின் சில நிலைகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும், இது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். அதற்கு முன் கல்லீரல் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்.
கல்லீரலின் அமைப்பு, செயல்படும் விதம், கல்லீரல் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவும் சோதனை, மஞ்சள் காமாலை வருவதன் காரணங்கள், அறுவை சிகிச்சை எப்போது தேவை, மஞ்சள் காமாலை வராமல் தடுப்பதற்கு என்ன செய்வது ஆகிய கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம்.
கல்லீரலின் அமைப்பு
வயிற்றிலிருக்கும் உறுப்புகளிலேயே மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்தான். இதன் எடை ஒன்றரை கிலோ வரை இருக்கும். நமது உடலின் வலது பக்க மார்பகத்துக்குக் கீழ் கல்லீரல் அமைந்திருக்கும்.
கல்லீரலை Left lobe, Right lobe என இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். இவை தவிர எட்டு செக்மெண்டுகள் உள்ளன. இந்த செக்மெண்டுகள் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையின்போது மிக மிக முக்கிய பங்காற்றுகின்றன.
கல்லீரலின் உள்ளே சிறு சிறு பித்தக்குழாய்கள் நிறைய இருக்கின்றன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து வலது புறம் ஒரு பித்தக்குழாயாகவும், இடதுபுறம் ஒரு பித்தக்குழாயாகவும் கீழ் நோக்கி வருகின்றன. இவையிரண்டும் பித்தப்பையிலிருந்து வரும் பித்தக்குழாயுடன் இணைந்து மிகப்பெரிய பித்தக்குழாயாக உருவாகிறது. இவை கணையக்குழாயுடன் இணைந்து சிறுகுடலில் சேர்கிறது.
இதில் என்ன முக்கியமென்றால், கல்லீரலில் உருவாகும் பித்த நீர் இந்த வழியேதான் சிறுகுடலுக்கு வந்து செரிமானத்துக்கு உதவி செய்கிறது. குறிப்பாக, கொழுப்பு உணவுப்பொருட்களின் செரிமானத்துக்கு உதவுகிறது.
கல்லீரலின் வேலைகள் என்னென்ன?
பித்தநீர் உற்பத்தி, சிலவிதமான பிளாஸ்மா புரதங்கள் தயாரித்தல், கொலஸ்ட்ரால் உற்பத்தி, வயிற்றிலிருந்து கோழுப்பு மற்றும் அதிக மாவுச்சத்தினை எடுத்துச் செல்ல உதவுதல், நம் உணவில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸினை க்ளைக்கோஜனாக மாற்றி பாதுகாப்பது, ரத்தத்தில் அமினோ அமிலங்களை சீராகப் பராமரிப்பது, வயிற்றுக்குள் உருவாகும். அமோனியா போன்ற விஷத்தன்மை கொண்ட பொருள்களை யூரியாவாக மாற்றுவது, நாம் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் விஷத்தன்மையினை அகற்றுவது. நோய்த்தொற்று ஏற்படாமல் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வது, ரத்த ஓட்டத்திலிருந்து பாக்டீரியாவை அகற்றுவது போன்ற மிக முக்கியமான பணிகளை கல்லீரல் செய்கிறது.
கல்லீரலின் செயல்பாட்டினைக் கண்டறியும் சோதனைகள்
பிலிருபின் சோதளை, ALT, AST, ALP, அல்புமின், மொத்த புரத அளவு சோதனை, GGT, PT, USG, CT Scan, MRCP Scan போன்ற பலவிதமான சோதனைகள் மூலம் கல்லீரலின் செயல்பாட்டினை அறிந்துகொள்ளலாம்.
மஞ்சள் காமாலை
கண்கள், சருமம் மற்றும் மியூகஸ் மெம்ப்ரேன் மஞ்சள் நிறத்தில் மாறுவது ஆகியவை மஞ்சள் காமாலை ஏற்பட்டால் வெளியே தெரியும் பொதுவான அறிகுறிகள். ஆனால், இவை மட்டுமே மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் அல்ல.
காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி, சோர்வு போன்ற அறிகுறிகளும் தோன்றும். வயிற்றில் நீர் கோப்பது, காலில் நீர் கோப்பது, ரத்த வாந்தி, ரத்தம் கலந்து மலம் வெளியேறுதல், சுவாசிப்பதில் சிரமம், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக சிறுநீர் குறைவாக வெளியேறுதல், எடை குறைவது, பசியின்மை, அரிப்பு, மலத்தின் நிறம் வெள்ளையாக மாறுதல் போன்ற அறிகுறிகள் மூலமும் இதைக் கண்டறியலாம்.
மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்கள் என்ன?
ஹெபடைட்டிஸ் ஏ அல்லது ஈ தொற்று, மலேரியா, மது அருந்துதல், கல்லீரலில் கொழுப்பு உருவாதல், உடல் பருமன், மருந்துகள் உட்கொள்ளுதல், எலி பாஷாணம் உட்கொள்ளுதல்,சில நாட்டு மருந்துகள், பிறக்கும்போதே ஏற்படுவது போன்ற காரணங்களால் மஞ்சள் காமாலை உருவாகலாம்.
அறுவை சிகிச்சை செய்ய அவசியமான சர்ஜிக்கல் காரணங்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம். பிறவியிலேயே கல்லீரல் உள்ளே அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை வருவது மற்றும் பித்தக்குழாய் பகுதியில் அடைப்பு ஏற்படுவது, பித்தப்பை கற்கள் அடைப்பு, கணையம் பாதிப்பது, புற்றுநோய் போன்ற பல சர்ஜிக்கல் காரணங்கள் இதில் முக்கியமானவை. இதனை ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனை மேற்கொள்ளலாம்.
சிகிச்சைகள் என்னென்ன?
மஞ்சள் காமாலைக்கென சில மருந்துகள் உண்டு. தேவைக்கேற்ப ஸ்டீராய்டு மருந்துகளும் பயன்படுத்தப்படும். இத்துடன் எண்டோஸ்கோபி. லேப்ராஸ்கோபி, கல்லீரல் மாற்று சிகிச்சை போன்ற மேலதிக நடவடிக்கைகளும்
சூழலுக்கேற்ப தேவை.
அறுவை சிகிச்சை என்பதில் முன்பு போல ஓபன் சர்ஜரி மட்டுமே கிடையாது. அதில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒப்பன் சர்ஜரி முறையில் பண்ண வேண்டியதைக்கூட இப்போது லேப்ராஸ்கோப் முறையிலேயே செய்ய முடியும்.
மஞ்சள் காமாலையிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது?
- மஞ்சள் காமாலை எப்படி வந்தது என்று அதற்கான மூல காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். அதன் பிறகே சிகிச்சையினைத் தொடங்க வேண்டும்.
- மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.குறைந்த அளவு மது, தரமான மது என்பதெல்லாம் ஆசை காட்டும் மோசடி வார்த்தைகள், மது என்பது மதுதான்!
- எப்போதும் சுத்தமான, சுகாதாரமான தண்ணீரையே பருக வேண்டும். உணவும் அதேபோல சுகாதாரமானதாக இருக்க வேண்டும்.
- சமச்சீர் உணவுமுறையை பின்பற்றுவது அவசியம். அதிக கார்போஹைட்ரேட், துரித உணவு என்பதுபோன்ற கன்னாபின்னா உணவு முறை இருக்கக் கூடாது.
- சிரிஞ்ச் (ஊசி) பயன்படுத்தும்போது அது கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பாதுகாப்பற்ற உடல் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. இதனால்தான்
ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
- ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி தொற்றை தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் தவிர்க்க முடியும்.
- மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்தே போதும் என்று நினைக்கக் கூடாது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கல்லீரல் மாற்று சிகிச்சை பற்றி டாக்டர் சுவாமிநாதன் சம்பந்தம் விளக்கியதிலிருந்து…
கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது புதிய விஷயம் அல்ல, கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே வெளிநாடுகளில் நடந்து வருகிறது. 1967ம் ஆண்டிலேயே அமெரிக்காவில் முதல் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்துவிட்டார்கள்.
இந்தியாவில் கடந்த 20 வருடங்களாக நிறைய கல்லீரல் மாற்று சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இதன் வெற்றி விகிதம் 90 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. இதற்கான காரணம் இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. நிபுணர்களும் அதிகமாகியுள்ளனர். கட்டணமும் குறைந்து வருகிறது.
யாருக்கு மாற்று சிகிச்சை தேவை?
கல்லீரல் பாதிப்புக்கு அனைத்து சிகிச்சைகளும் முயற்சிகளும் மேற்கொண்ட பிறகு கடைசி கட்டமாகத்தான் மாற்று சிகிச்சை என்கிற முடிவுக்கே வருவோம்.
இதுபோன்ற கடைசிக் கட்ட கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கே கல்லீரல் மாற்று சிகிச்சை தேவை.
- பொதுவாக, பல நோய்கள் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படலாம். பிறப்பிலேயே ஏற்படும் கோளாறு ஒரு காரணம். மதுவினால் கல்லீரல் புண்ணாகி பிறகு தழும்பாக மாறி சிரோசிஸ் என்ற நிலையை அடையும். இவர்களுக்கு மருந்து , மாத்திரைகள் பலனளிக்காது என்கிற நிலை ஏற்படும்போது உறுப்பு மாற்று சிகிச்சை தேவை.
- தவறான உணவுப்பழக்கம் காரணமாக சமீபகாலமாக கல்லீரலில் கொழுப்பு படிந்து புண்ணாகிறது. இது 10,15 ஆண்டுகளில் ஃபைப்ரோஸிஸ் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சுருங்கிவிடும். அதோடு கல்லீரல் செயலிழப்பில் கொண்டுபோய் விடும். இவர்களுக்கு மாற்று அறுவைசிகிச்சை தேவை.
- எலி பாஷாணம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு விடும்.
- நாட்டு மருந்துகளால் Acute liver failure என்ற கவலைக்குரிய நிலையை அடைந்தவர்களுக்கும் மாற்று சிகிச்சை தேவை.
- ஹெபடைடிஸ் பி மற்றும் சி காரணமாகவும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்.
- கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டாலும் மாற்று சிகிச்சை தேவை.
எப்படி கல்லீரல் மாற்று சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது?
உறுப்பு மாற்று சிகிச்சை ஒரு நோயாளிக்கு தேவை என்பதை ஸ்கோர் முறையில் தீர்மானிக்கிறோம்.அதாவது கல்லீரல் எந்த அளவு சேதமடைத்திருக்கிறது, மஞ்சள் காமாலை என்ன நிலையில் இருக்கிறது என்பதை ரத்தப் பரிசோதனை, ஸ்கேள் போன்ற முறையில் கண்டறியலாம்.
உறுப்பு தானம் எப்படி செய்யப்படும்?
- தானம் இரண்டு வழிகளில் பெறப்படலாம். மூளைச் சாவு அடைந்த ஒருவரிடமிருந்து (Cadaver donation) கல்லீரல் தானம் பெறலாம். இதற்கு அரசாங்கத்திடம் முன்பே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
- Living donor என்ற இரண்டாவது முறையில் உறவுகளின் வழியில் கல்லீரல் தானம் பெறலாம்.
- தானத்துக்காக கல்லீரலில் ஒரு சிறுபகுதியினை வெட்டி எடுப்பார்கள்.
- கல்லீரலின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? அது நகம், முடி போல மீண்டும் வளரக் கூடியது என்பதே!
- தானம் கொடுத்தவருக்கு எடுக்கப்பட்ட கல்லீரல் நான்கு வாரங்களில் வளர்ந்துவிடும். மீண்டும் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்.
- கல்லீரல் மாற்று சிகிச்சையினை குழந்தைகளுக்கும் செய்ய முடியும். குழந்தைகளுக்கான வெற்றி விகிதம் வயது வந்தவர்களுக்கு இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
- தானம் கொடுப்பவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 33 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Jun 27, 2024