பருவகால ஒவ்வாமைகள் மற்றும் அதைத் தடுக்கும் வழிகள்
ஒரு பொருளை உங்கள் உடல் எதிர்கொள்ளும் போது, அதற்கு உடல் அளிக்கும் நோயெதிர்ப்பு எதிர்வினை “ஓவ்வாமை (ஆலர்ஜி)” எனப்படுகிறது. அப்படிப்பட்ட பொருட்கள் “ஒவ்வாமை அளிக்கும் பொருட்கள் (அலர்ஜென்)” எனப்படுகின்றன. மகரந்தம், தேனீ விஷம் மற்றும் பூனை முடி ஆகியவை சில பொதுவான ஒவ்வாமை அளிக்கும் பொருட்கள் ஆகும். சில சமயம் சில உணவுகள் அல்லது மருந்துகளினால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். இதன் விளைவாக வீக்கம் அல்லது அரிப்பு எதிர்வினை ஏற்படலாம். ஒவ்வாமையின் தீவிரம் எல்லோருக்கும் ஒரே மாதிரி ஏற்படுவதில்லை. தொண்டையில் லேசான அரிப்பு போல் ஏற்படலாம், அல்லது கடுமையான படைநோய் மற்றும் வீக்கம் போலவும் ஏற்படலாம்.
ஒவ்வாமை ஏற்படக் காரணம் என்ன?
அளவுக்கதிகமாக செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பின் விளைவாக ஒவ்வாமை ஏற்படுகிறது. கிருமிகள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அன்னியப் பொருட்களை எதிர்த்து போராட ஆன்டி-பாடிகள் எனப்படும் பாதுகாப்பு புரதங்களை உருவாக்குவதன் மூலம் நமது நோயெதிர்ப்பு மண்டலம் நம் உடலைப் பாதுகாக்கிறது. ஆனாலும், சில நேரங்களில் அளவுக்கதிகமாக செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு, உடலுக்கு பாதிப்பில்லாத பொருட்களைக் கூட அச்சுறுத்தலாக உணர்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, தோல், சைனஸ்கள், காற்றுப்பாதைகள் மற்றும் செரிமான அமைப்பில் அழற்சி ஏற்படுத்துகிறது.
பருவகால ஒவ்வாமை என்றால் என்ன?
பூக்களின் மகரந்தம் போன்ற காற்றில் பரவும் பொருட்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வதன் விளைவாக பருவகால ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன; இவை ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றும். மகரந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வசந்த காலத்தில் பருவகால ஒவ்வாமைகள் தோன்றலாம். புல்லுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கோடைக் காலத்தில் ஒவ்வாமைகள் தோன்றலாம். உலகின் வெவ்வேறு பகுதிகளில், அவற்றின் இயற்கை சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறு பருவகால ஒவ்வாமைகள் தோன்றும்.
பருவகால ஒவ்வாமை அறிகுறிகள் - மூக்கு மற்றும் தொண்டை மீதான அவற்றின் தாக்கம்
பருவகால ஒவ்வாமை அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் மூக்கு, வாயின் மேற்புறம், தொண்டையின் பின்புறம் மற்றும் கண்களை பாதிக்கலாம். ஒவ்வாமையின் தீவிரத்தைப் பொறுத்து, அரிப்பு படிப்படியாகவோ அல்லது திடீரெனவோ தோன்றலாம். பெரும்பாலான மக்களுக்கு மூக்கு ஒழுகுதல் தொடங்கி, பின்னர் ஒவ்வாமைப் பருவத்தில் இது மூக்கடைப்பு ஏற்படுத்துகிறது. மூக்கின் உள் புறமும் வீங்கி சிவப்பாக மாறலாம். மூக்கு ஒழுகுவதால் சைனஸ் அடைத்துக் கொண்டு, தலைவலி ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், தீவிர ஒவ்வாமை தாக்குதல்களின் போது சிலருக்கு சைனஸ் தொற்றுகள் மற்றும் காது நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.
Also Read: Symptoms You Should Never Ignore
மூச்சிரைப்பு, வறண்ட தொண்டை மற்றும் ஆஸ்துமா ஆகியவை பருவகால ஒவ்வாமைகளின் போது பொதுவாகக் காணப்படும் மற்ற அறிகுறிகளாகும். இது பெரிதும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், தூங்குவது சிரமமாக இருக்கலாம். கண்களில் நீர் மற்றும் அரிப்பு கூட ஆரம்பிக்கலாம். சில சமயங்களில் கண்களின் வெண்மை சிவப்பு நிறமாகி, கண் இமைகள் வீங்கிவிடக்கூடும். இத்தகைய சூழ்நிலைகளில், காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
பருவகால ஒவ்வாமை நோய்களைக் கண்டறிவது எப்படி?
பருவகால ஒவ்வாமைகளைக் கண்டறிவது சூழலைச் சார்ந்தது. உங்கள் மருத்துவர் உங்கள் உடல் அறிகுறிகளை மதிப்பீடு செய்வார். உங்கள் நோயெதிர்ப்பு எதிர்வினையை தூண்டியது எது என்பதைக் கண்டறிய உங்கள் சமீபத்திய செயல்பாடுகளைப் பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்கலாம். பொதுவாக, ஒவ்வாமை பரிசோதனை செய்வது அவசியமில்லை. ஆனால், ஒவ்வாமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றால், தோல் பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்தச் சோதனையில், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளின் ஒரு சிறிய மாதிரி உங்கள் தோலில் வைக்கப்பட்டு, அதன் வழியாக ஒரு ஊசி குத்தப்படுகிறது. குறிப்பிட்ட பொருளுக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், ஒரு சிறிய வீக்கம் ஏற்படும். இது ஒரு கொசுக்கடி போல் தோற்றமளிக்கும்.
பருவகால ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்
பருவகால ஒவ்வாமைகள் மிகுந்த அசௌகரியம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம், ஆனால் அதற்காக நீங்கள் மனம் தளர வேண்டியதில்லை. உங்கள் பருவகால ஒவ்வாமைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இதோ சில எளிய உத்திகள்:
- தூண்டுதல்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வதைக் குறைக்கவும் - ஒவ்வாமை பருவத்தில் அறிகுறிகளைத் தூண்டக்கூடிய தூசி மற்றும் மகரந்தம் ஆகியவற்றுக்கு வெளிப்படுத்திக் கொள்வதைக் குறைக்க முயற்சிக்கவும். வறண்ட, காற்று வீசும் நாட்களில் காற்றில் தூசி மற்றும் மகரந்தம் அதிகமாக இருக்கும், அதனால் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவும். வெளியில் செல்ல நேர்ந்தால் கட்டாயம் முகமூடி அணியவும். ஒவ்வாமை பருவத்தில் தோட்ட வேலையைத் தவிர்க்கவும். நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் வெளிப்புற ஆடைகளை அகற்றிவிட்டு, குளித்துவிட்டு சுத்தமான பருத்தி ஆடைகளுக்கு மாறுவது நல்லது. மகரந்தம் மற்றும் தூசி ஒட்டிக்கொள்ளும் என்பதால், உங்கள் சலவை செய்த துணிகளை (குறிப்பாக படுக்கைவிரிப்புகள் மற்றும் துண்டுகள்) வெளியே உலர விடாதீர்கள்.
- உங்கள் வீட்டைத் தூண்டுதல் இல்லாமல் வைத்திருங்கள் - உங்கள் வீட்டிலிருந்து தூசி மற்றும் மகரந்தத்தை முழுவதுமாக அகற்ற எந்த ஒரு வழியும் இல்லை, ஆனால் வீட்டில் ஏர் கண்டிஷனிங் போட்டு வைப்பது உதவலாம். ஏர் கண்டிஷனிங்கில் வடிப்பான்கள் இருப்பதால் அது தூசி மற்றும் துகள்களை அகற்றுகிறது. இந்த வடிப்பான்களை அடிக்கடி சுத்தம் செய்து மாற்றுங்கள். உங்கள் படுக்கையறை மற்றும் உங்கள் காரில் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை பொருத்தலாம்.
- உங்கள் சைனஸை சுத்தமாக கழுவுங்கள் - ஒவ்வாமை தொடங்குகிறது என்று நீங்கள் உணர்ந்தால், உடனடியாக உங்கள் மூக்கு சுவாசப்பாதைகளை உப்பு கரைசல் கொண்டு கழுவவும். இது நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய எளிதான செயல்முறையாகும். மூக்கு அடைப்பை போக்க இது ஒரு சிறந்த வழியாகும். இது உங்கள் மூக்கிலிருந்து சளி, ஒவ்வாமை மற்றும் தூசி எல்லாவற்றையும் அகற்றிவிடும்.
- மருந்துக்கடையில் மருத்துவர் சீட்டின்றி கிடைக்கும் நிவாரணிகளை பயன்படுத்தலாம் - உங்கள் ஒவ்வாமை அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும் பல மருந்துச்சீட்டின்றி கிடைக்கும் நிவாரணிகள் உள்ளன. வாய்வழி எடுத்துக் கொள்ளும் ஆண்டிஹிஸ்டமின்கள், நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் வாய்வழி எடுத்துக் கொள்ளும் அடைப்பு-நிவாரணிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசிக்கவும்.
- உங்களுக்கு நீண்டகால அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும் - உங்கள் ஒவ்வாமை மிகவும் மோசமாக இருந்தால் மற்றும் மருந்துச்சீட்டின்றி கிடைக்கும் நிவாரணிகள் உங்களுக்கு நிவாரணம் தரவில்லை என்றால், கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உங்களுக்கு என்ன ஒவ்வாமை இருக்கிறது என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவர் சில பரிசோதனைகளை பரிந்துரைப்பார். சிலருக்கு, ஒவ்வாமை நோயெதிர்ப்பு சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இது “டீசென்சிடைசேஷன்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வாமை நோயெதிர்ப்பு சிகிச்சையின் போது, சிறிய அளவிலான “ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்” அவ்வப்போது முறையாக ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன; அப்போது அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு அதற்கு பழகிக் கொள்கிறது. இதன் விளைவாக காலப்போக்கில் அறிகுறிகள் குறைகின்றன.
- Nov 11, 2024