தோல் வியாதிகள் மற்றும் அவற்றைப் புறக்கணிப்பதால் ஏற்படும் அபாயங்கள்
நாம் கவனிக்க வேண்டிய சில பொதுவான தோல் வியாதிகள் இதோ:
1.மிகவும் வறண்ட சருமம்
உங்களுக்கு மிகவும் வறண்ட சருமம் இருந்தால், தோல் தொற்றுநோய்கள் மற்றும் வீக்கம் உள்ளிட்ட கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். வயதாக ஆக, நமது சருமத்தில் உள்ள சுரப்பிகள் உற்பத்தி செய்யும் எண்ணெயின் அளவு குறைகிறது, அத்துடன் சூடான நீரில் குளித்தல், அடிக்கடி கை கழுவுதல், கடுமையான சோப்புகள் பயன்படுத்துதல் மற்றும் குளங்களில் உள்ள குளோரின் ஆகியவை சருமத்தை மேலும் உலர்வாக்கும். இதற்கான தீர்வாக, குளியல் முடிந்த உடனேயே தினமும் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
2. அரிப்பு, செதில்கள் அல்லது வெடிப்பு உள்ள தோல்
தோலில் அரிப்பு, செதில், வெடிப்பு, அழற்சி அல்லது எரிச்சல் ஏற்பட்டால் அதிக கவனம் தேவை. லேசான எரிச்சல் இருந்தால் ஹைட்ரோகார்ட்டிசோன் (hydrocortisone) கிரீம் மூலம் நிவாரணம் பெறலாம், ஆனால் மிகவும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு மருத்துவ கவனிப்பு கண்டிப்பாகத் தேவை.
எக்சிமா (Excema) என்பது ஒரு பொதுவான தோல் நோய் ஆகும், இதில் தோல் அழற்சி, சிவத்தல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. இதைக் குழந்தை பருவ நோய் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பெரியவர்களிடமும் இது பரவலாகக் காணப்படுகிறது.
சோரியாசிஸ் (Psoriasis) எந்த வயதிலும் உருவாகலாம், இது ஒரு மரபணு தோல் நோயாகும். இது வெள்ளி நிற செதில்களுடன் அடர்த்தியான, சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் உள்ள அரிப்பு அல்லது புண் திட்டுகள் ஆகும். சோரியாசிஸினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பின்னாளில் மூட்டுவலி தொடர்பான பிரச்சினைகளும் தோன்றலாம்.
மிகவும் வறண்ட, அரிக்கும் தோல் சிறுநீரக நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம், ஆனால் பொதுவாக நோய் முற்றிய பிறகே இந்த நிலை கண்டுபிடிக்கப்படுவதால், இதற்கான தீர்வாக டயாலிசிஸ் அல்லது மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உள்ளது.
3. தொடர்ந்து சிராய்ப்பு ஏற்படுதல்
உங்கள் கையை இடித்துக் கொண்டதனால் காயம் ஏற்பட்டு, அது ஒரு சில நாட்களில் மறைந்து போனால் கவலையில்லை. ஆனால் வயதாக ஆக நமது தோல் மிகவும் மெல்லிதாக மாறுவதால், எளிதில் சிராய்ப்பு ஏற்படுவதுடன் அது நீண்ட காலம் வரை நீடிக்கும். அதற்குக் காரணம் இரத்த உறைவு பிரச்சனை ஆகும். இதை நாம் உடனுக்குடன் கவனிக்க வேண்டும்.
4. முகப்பரு அல்லது முகப்பரு போன்ற புடைப்புகள்
குறிப்பாக வயதான பெண்களிடையே மாதவிடாய் நிறுத்தத்தின் காரணமாக ஹார்மோன் மாற்றங்களினால் முகப்பரு ஏற்படும், இது ரோசாசியா(rosacea) எனப்படும் ஒரு மருத்துவ நிலையாக இருக்கலாம். ரோசாசியா பொதுவாக மூக்கு மற்றும் கன்னங்களில், வெளிப்படையாகப் பார்க்கக்கூடிய இரத்த நாளங்கள் மற்றும் சிவப்பு சீழ்-நிரப்பப்பட்ட புடைப்புகளாக தோன்றும். சூடான பானங்கள் மற்றும் மதுபானம் குடித்தல், காரமான உணவு சாப்பிடுதல், சூடான நீரில் குளித்தல், உடற்பயிற்சி மற்றும் எளிதில் உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை இவை தோன்றுவதற்கான சில காரணங்கள் ஆகும்.
ரோசாசியாவுக்கு தீர்வாக எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அதை நிர்வகிக்கவும் அறிகுறிகளைக் குறைக்கவும் நாம் கற்றுக்கொள்ளலாம்.
5. காலில் சொறி ஏற்படுதல்
எந்தவொரு சொறி ஏற்பட்டாலும் நாம் அதை கவனிக்க வேண்டும், குறிப்பாக அது பரவலாக இருந்தாலோ அல்லது காய்ச்சல் அல்லது வலியுடன் இருந்தாலோ. அத்லீட்ஸ் ஃபுட்(Athlete’s foot) என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும், இது பெரும்பாலும் கால்விரல்களுக்கு இடையில் எரிச்சலூட்டும் திட்டுகளை ஏற்படுத்தும். இதை கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால், நோய்த்தொற்று கால் நகங்களுக்கு பரவலாம், அதன் பிறகு அதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். இந்தத் தொற்று திறந்த புண்களை ஏற்படுத்தும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆபத்தானது. ஆரம்பக் கட்டத்தில் ஒரு சிறிய தொந்தரவாக தொடங்கும் இந்தத் தொற்று, ஒரு காலை முழுவதுமாக துண்டித்து விடும் அளவுக்கு கொண்டு செல்லலாம்.
6. தட்டையான, கருமையான புள்ளிகள்
உங்கள் கைகள், முதுகு, மார்பு அல்லது வேறு இடங்களில் தோன்றும் தட்டையான புள்ளிகள் அல்லது கறைகள் சோலார் லென்டிஜின்கள்(solar lentigines) என்று அழைக்கப்படுகின்றன. இவை அதிகமான அளவில் இருந்தால், பல ஆண்டுகளாக நீங்கள் சூரிய ஒளிக்கு உங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்... இதன் விளைவாக தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலமும், உங்கள் தோலை மறைக்கும் ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிவதன் மூலமும், சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றுக்கான அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
7. பெரிய அல்லது எரிச்சலூட்டும் தோல் மச்சங்கள்
தோல் மச்சங்கள் (Skin Tags) மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதைப்பற்றுள்ள வளர்ச்சி ஆகும். நமது தோல் வேறொரு பகுதியிலுள்ள தோலுடனோ அல்லது ஆடையுடனோ, உதாரணமாக அக்குள், மார்பகங்களின் கீழே அல்லது கழுத்து போன்ற பகுதிகளில், உராயும் போது இது ஏற்படும். பொதுவாக இதனால் ஆபத்தில்லை. ஆனால் அவற்றில் தொற்று ஏற்பட்டாலோ அல்லது அவை வீக்கமடைந்தாலோ, நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும், அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்றும் தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சில சமயம் இது வேறொரு அரிதான நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், திடீரென்று நிறைய தோல் மச்சங்கள் தோன்றும் பட்சத்தில் மருத்துவரை நாடவும்.
சில சமயங்களில் சிறிய மலட்டு கத்தரிக்கோல், நூல் அல்லது பிற வழிகள் மூலம் மக்கள் தாங்களாகவே சிறிய தோல் மச்சங்களை அகற்றுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டாலும், உறைதல் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றுவதே சிறந்தது என்று தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
8. செல்லுலைடிஸ்
இயற்கையாக வயதாவதன் காரணமாக, வயதானவர்களுக்கு தோல் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது; அதில் மிகவும் பரவலாகக் காணப்படுவது செல்லுலைடிஸ். இந்த தொற்று, தோலின் ஆழமான அடுக்கையும், தோலின் அடியில் காணப்படும் கொழுப்பின் அடுக்கையும் பாதிக்கிறது. இதன் விளைவாக மிகவும் வலிமிகுந்த தொற்றுநோய் ஏற்படுகிறது, இது வீக்கம், சிவத்தல் மற்றும் பல்வேறு வகையான தோல் எரிச்சல்களை ஏற்படுத்துகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது இரத்த நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும், அத்துடன் உங்கள் நல்வாழ்வை மோசமாக பாதிக்கும்.
9. அழுத்தப் புண்கள்அல்லது படுக்கைப் புண்கள்
உடல் இயலாமை அல்லது நடக்க முடியாமல் இருத்தல் போன்ற மருத்துவ நிலைகள் காரணமாக அவதிப்படுபவர்களுக்கு அழுத்தப் புண்கள், அல்லது படுக்கைப் புண்கள் எளிதிலும், விரைவாகவும் உருவாகலாம். இதனை கவனித்து உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், ஆழமான அழுத்த புண்கள் ஏற்பட்டு அதை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மேலே பட்டியலிடப்பட்ட தோல் நிலைகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்பட்டால், அந்த நிலை முற்றி உங்களுக்கு மிகுந்த தொந்தரவு ஏற்படுத்தும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம். இது போன்ற கடுமையான தோல் நிலைகளில் காலம் கடத்தாமல் உடனடியாக தோல் மருத்துவர் உதவியை நாடி சிகிச்சை மேற்கொண்டால் மேலும் மோசமாவதிலிருந்து தப்பலாம்.
- Jul 20, 2023