அலட்சியப் போக்குகளால் பாதிப்புக்குள்ளாகும் தண்டுவடம்
இன்றைய உலகில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் பொதுவான உடல்நலக் கவலைகளில் ஒன்று முதுகுவலி. மாறிவரும் வாழ்க்கைமுறையால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஏதேனும் ஒரு செயலை அலட்சியமாகக் கருதி தொடர்ந்து செய்யும் ஒரு தவறான முறையால் மனித உடலில் மிகவும் அற்புதமான கட்டமைப்பில் உள்ள தண்டுவடம் ஒழுங்கமைப்பிலும் செயல்பாட்டிலும் பாதிப்புகுள்ளாகிறது. நம்மிடம் ஒரு கேள்வி வரும். அது எப்படி? சிறு தவறால் உடலுக்குள் சதை நார்களாலும் எலும்புகளாலும் தோல்களாலும் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதி பாதிப்படையும் என்று பலர் நினைக்கலாம் ஏதேனும் நோய் மூலமாகவோ, அடிபட்ட காயங்களின் மூலமாகவோ தண்டுவடம் பாதிக்கப்படும். பிரச்னை அதுமட்டுமே அல்ல… நாம் தினசரி மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களால்கூட நம் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, முதலில் வலியை உண்டாக்கும். பிறகு அதுவே நம் கை, கால் உறுப்புகளைக்கூட செயலிழக்கச் செய்ய நேரிடும். எனவே, முதுகுவலிக்கான சாத்தியமான பல்வேறு காரணிகளை தெரிந்துகொள்வோம்.
உறக்கம்
உறங்கும்போது கிட்டத்தட்ட 6 முதல் 8 மணி நேரத்தை அறியாமையிலேயே செலவழிக்கிறோம். முதலில் நாம் பயன்படுத்தும் மெத்தை விரிப்பு போன்றவை நம் உடலுக்கு ஏற்றவாறு சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குண்டும் குழியுமாகச் சுருக்கம் அதிகம் உள்ள மெத்தை, மெத்தை விரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. கை, கால்களைச் சுருக்கிக் கொண்டு குறுகிப் படுப்பதும் தண்டுவடத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.
காலணிகள்
நாம் பயன்படுத்தும் காலணிகளை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து உபயோகிப்பதால் தேய்ந்து போகலாம். சிலர் – குறிப்பாக பெண்கள் ஸ்டைலுக்காக ஹை-ஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்துகின்றனர். சிலர் தேய்ந்துபோன காலணிகளை பயன்படுத்துவதால் நமது உடலின் எடை ஒரு புறமாக அதிகரிப்பதால் நம் நடையை மாற்றி விடுகிறது. இதுவே முதுகு மற்றும் கழுத்து வலிக்கு வழிவகுக்கிறது.
Also Read: Wrong posture while riding two-wheelers damaging the spine in youngsters
தோள்பட்டைப் பைகள்
பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பயணம் செய்யக்கூடிய நபர்கள் என அனைவருமே தோள்பட்டையில் பைகளை மாட்டிக்கொண்டு செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதிக எடையை சமமாக இல்லாமல் ஒருபுறமாக மாட்டிக் கொண்டு செல்வதால் நம் முதுகு எலும்புகளை வளையச் செய்து வலியை உண்டாக்குகிறது. முடிந்தவரை நம் பையின் எடை குறைக்கப்பட்டு, அதைச் சமமான அளவில் இருக்கும்படி தூக்கிச் சென்றால் இந்த விளைவை தவிர்க்கலாம்.
உடல் பருமன்
ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வுகள் உடல் பருமனுக்கும் முதுகு வலிக்கும் இடையே உள்ள தொடர்பை காட்டுகின்றன. தசைகளின் எடை அதிகரிக்கும்போது, அந்த எடையைத் தாங்க முடியாமல் முதுகில் ஒரு விதமான தொய்வு ஏற்பட்டு வலியை உண்டாக்குகிறது. இதற்கு உடல் எடையை குறைப்பதைவிட வேறு தீர்வு என்ன இருக்க முடியும்?
மோசமான தோரணை (Posture)
தவறான தோரணையின் காரணமாக முதுகுதண்டுவடத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தம் ஏற்படுவது முதுகுவலிக்கும் வழிவகுக்கும். நம் நவீன பணிச்சூழலில் படிக்கும்போது, கணிப்பொறியில் வேலை செய்யும் போது என நாம் அதிக நேரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையிலேயே செயல்படுகிறோம். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது முக்கிய தசைகள் பலவீனமடைவதற்கும் தண்டுவடத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது. அதனால், நேராகப் பார்க்க வேண்டும். முதுகுத்தண்டுவடப் பகுதியை நேராக வைத்திருக்கும் நாற்காலியை பயன்படுத்த வேண்டும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அதிக அழுத்தம் தண்டுவடத்துக்கு செல்வதைத் தவிர்க்கலாம்.
மணி பர்ஸ்
நாம் அறியாமலே செய்யும் இந்தப் பழக்கம்கூட அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிடைக்கின்ற எல்லா குப்பைகளையும் மணி பர்ஸில் சேர்த்து அதன் தோற்றத்தைப் பெரிதாக்கி, பின்னர் அவற்றை கால் சட்டையின் பின்பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அதிக நேரம் அமர்ந்திருப்பது சிலருக்கு வழக்கம். அப்போது உடலின் எடை ஒருபுறமாகச் செல்வதால் தண்டுவடத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் Wallet Syndrome, Scoliosis போன்ற பிரச்னைகள் வரும் அபாயம் ஏற்படுகிறது. உட்காரும்போது மணிபர்ஸை பாக்கெட்டிலிருந்து எடுத்து வைத்துவிட வேண்டும். மணிபர்ஸை முன்பாக்கெட்டில் வைத்திருப்பதும் நல்லதே. முடிந்தவரை அதிக குப்பைகளை மணிபர்ஸில் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.
தலையணை
பல நபர்களிடம் காணப்படும் வழக்கம் இது… படுத்திருக்கும்போது உயரம் அதிகமுள்ள தலையணையையோ, இரண்டு, மூன்று தலையணைகளை ஒன்றாகச் சேர்த்தோ, அதில் தலைவைத்து உறங்குவது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைவதோடு, கழுத்து எலும்புகளில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு வலியை உண்டாக்குவதோடு தண்டுவடத்தில் அபாய நிலையை ஏற்படுத்தக் கூடும். முடிந்தவரை சரியான அளவுள்ள தலையணையை பயன்படுத்துவதால் பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.
இதுபோன்ற இன்னும் பல தவறாகச் செய்யப்படும் பழக்க வழக்கங்களே தண்டுவடம் பாதிக்கப்பட காரணமாக உள்ளன.
வலி என்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நாம் அறியாமல் செய்யும் தவறான செயல்களால் உடலமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இவற்றை பிரதிபலிக்கக்கூடிய ஒரு அறிகுறிதான் வலி. வலியைக் குறைக்க வழிகளைத் தேடாமல் வலியை உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து, அதற்கான தீர்வைப் பெறுவோம். பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்ப்போம். நம் தண்டுவடத்தை பாதுகாப்போம்!
தவறான தலையணை முறை, காலணிகள் மற்றும் பைகளைத் தவறான முறையில் பயன்படுத்துதல், உடல் பருமன், மோசமான தோரணை எனப் பல காரணிகள் முதுகுவலியை உண்டாக்குகின்றன. இவற்றைச் சரிசெய்வதன் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.
முதுகெலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?
உடல் செயல்பாடுகள்
தினசரி நடைப்பயிற்சி: ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சியை உறுதி செய்யவும். இது முதுகெலும்பை வலுப்படுத்த உதவுகிறது.
மென்மையான உடற்பயிற்சிகள்: முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா, பைலேட்ஸ் போன்ற மென்மையான உடற்பயிற்சிகளை இணைக்கவும்.
சரியான உபகரணங்கள்
பணிச்சூழலியல் நாற்காலிகள்: உங்கள் பணிச்சூழல் நல்ல தோரணையை ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும். போதுமான ஆதரவை வழங்கும் நாற்காலியைப் பயன்படுத்தவும்.
எடை மேலாண்மை: உங்கள் முதுகில் தேவையற்ற சிரமத்தைத் தவிர்க்க அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
Also Read: 5 Signs your Back Pain might be an Emergency
புதிய பழக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
அடிக்கடி இடைவேளை: உங்களுக்கு மேஜை வேலை இருந்தால் ஒவ்வொரு மணி நேரமும் எழுந்து நடக்கவும்.
எளிய நீட்சிப் பயிற்சிகள்: வேலை இடைவேளையின் போது டென்ஷனைப் போக்க லேசான நீட்சிப் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
Dr. Manivannan,
Consultant – Orthopaedics,
Kauvery Hospital Salem
- Aug 16, 2024