உங்கள் இதயத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
இதயம் என்பது மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இரத்தத்தை செலுத்துவதன் மூலம் வழங்க அயராது இயங்குகிறது. இது, செல்களிலிருந்து கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுகளை அகற்றி, அவற்றை கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகிறது, அங்கிருந்து அவை உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இரத்த சுற்றோட்ட அமைப்பின் மையத்தில் இடம்பெற்றிருக்கும் இதயம், உடல் செயற்பாடுகள் நன்கு அமைந்து நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால், மூளைச் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் நன்றாக அமையும்.
இதய ஆரோக்கியத்தை புறக்கணிக்கும் வகையில் நாம் மோசமான, ஊட்டச்சத்தில்லாத உணவு உண்ணுதல், முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் அல்லது மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றை செய்தால், இதய நோய், பக்கவாதம் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல் நிலைமைகள் ஏற்படக்கூடும். சீரான வாழ்க்கை முறை, முறையான உடல் செயல்பாடு மற்றும் அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் இதயத்தை கவனித்துக்கொண்டால் நீண்ட ஆயுளும் நல்ல வாழ்க்கைத் தரமும் அமையும்.
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில நடைமுறை நடவடிக்கைகளை பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுமுறை
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று உணவு என்பது மறுக்க முடியாத உண்மை. குறைந்த-அடர்த்தியுள்ள கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள், அதிகப்படியான சோடியம் மற்றும் அதிகப்படியான சர்க்கரை ஆகியவை இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நல்ல சமச்சீரான நிலையில் இருக்க வேண்டும். தினமும் பல்வேறு வகையான ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் நமக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளுக்குப் பதிலாக முழு தானியங்களைத் தேர்வு செய்யவும்.
எந்த ஊட்டச்சத்துக்களும் "கெட்டவை" அல்ல என்பதை நினைவில் கொண்டு, சமச்சீரான உணவில் எல்லா வகையான உணவுகளையும் சேர்க்க வேண்டும். ஒன்று அல்லது பல உணவுக்குழுக்களை உங்கள் உணவில் ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பது அல்லது நீக்குவது ஆரோக்கியமானதல்ல, மற்றும் அதை நீண்ட காலத்திற்கு பின்பற்றுவதும் கடினம்.
தொடர்புடைய வலைப்பதிவு: இதய நோயாளிகளுக்கான உணவுமுறைத்திட்டம்
ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
உடல்நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) என்பது ஒரு நபரின் உயரத்துடன் தொடர்புடைய உடல் எடையின் குறிகாட்டியாகும். பிஎம்ஐ 25ஐ விட அதிகமான இருந்தால் அதிக எடை அல்லது பருமன் என கருதப்படுகிறது. இடுப்பு-இடை விகிதமும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும், ஏனென்றால் இது உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள "நடுப்பகுதியில்" உங்கள் எடையைக் குறிக்கிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் இருந்தால், உங்கள் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை திறம்பட “பம்ப்” செய்வது கடினமாகிவிடும். அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு உதவ ஒரு மருத்துவர் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை நீங்கள் அணுகலாம்.
முறையான உடல் செயல்பாடு
உடல் செயல்பாடு தசைகளை உருவாக்கவும் கொழுப்புகளை எரிக்கவும் உதவுகிறது. முறையாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டால், இதய தசைகள் பலப்படுத்தப்படுவதுடன், செல் சுவாசத்திற்கு ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் உங்கள் உடலின் திறன் மேம்படுத்தப்படுகிறது. சராசரியாக, பெரியவர்கள் வாரத்திற்கு 150 நிமிடம் மிதமான உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் உடல்கொழுப்புகளை குறைக்கவும், எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இது ஆரோக்கியமான ஓய்வு இதயத் துடிப்பை பராமரிக்கவும் உதவுகிறது. உங்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு நேரம் முடியுமோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்தல் நலம். ஒரு வாரத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய முடிந்தாலும், அதைச் செய்ய வேண்டும். காலப்போக்கில் அதை நீங்கள் படிப்படியாக அதிகரிக்கலாம். நீங்கள் விரும்பும், உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
புகைபிடிக்கும் மற்றும் மதுஅருந்தும் பழக்கங்களை நிறுத்தவும்
மதுபானங்கள் மற்றும் புகையிலைப்பொருட்கள் இதயத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களாகும். வேறொருவர் புகைப்பிடிக்கும் போது வெளியிடும் புகையை சுவாசிப்பது கூட உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். சிலர் மனஅழுத்தத்தை சமாளிக்க இந்த பழக்கங்களை மேற்கொள்வதாக கூறுவார்கள், ஆனால் அதைச் சமாளிக்க தியானம், நடனம், இசை, விளையாட்டுகள் போன்ற வேறு பல ஆரோக்கியமான வழிகள் உள்ளன.
வழக்கமான உடற்பரிசோதனைகள்
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதித்துக் கொள்வது ஒரு நல்ல பழக்கமாகும். சில சமயங்களில், இறுதிக் கட்ட அறிகுறி வரை, நோயாளிகளுக்கு இதய நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது. வழக்கமான சோதனைகள் செய்து கொள்ளும் போது இதை முன்கூட்டியே கண்டுபிடித்து விட வாய்ப்புள்ளது. உடற்பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை முறையாக மேற்கொள்பவர்களுக்கு, பிரச்சனைகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கலாம். இந்த சமயத்தில், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் எடைக்குறைப்பு குறித்தும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
தொடர்புடைய வலைப்பதிவு: வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது எப்படி?
இறுதியாக சில வார்த்தைகள்…
உங்களுக்கு இருப்பது ஒரு இதயம் மட்டுமே. அதை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்!
உங்கள் உடலின் அனைத்து பகுதிகளும் சீராக செயல்பட உங்கள் இதயம் அயராது உழைக்கிறது. அதைக் கவனமாக பராமரிக்க சில எளிய வழிகள் இதோ…
சமச்சீரான ஊட்டச்சத்து அவசியம். உங்கள் உணவில் டிரான்ஸ் கொழுப்புகள், குறைந்த அடர்த்தி கொழுப்பு, அதிகப்படியான உப்பு மற்றும் பல எளிய சர்க்கரைகளை தவிர்க்கவும்.
சரியான உடல் எடையை பராமரிக்கவும்.
வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்
மது அருந்துவது மற்றும் புகையிலை/புகைப்பிடிப்பதை நிறுத்தவும்.
தியானம், நடனம் அல்லது இதர கலைகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தவும்.
முறையான உடல்நலப் பரிசோதனைகள் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், இவை உங்கள் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
- Jan 17, 2025