தாய்மை தரும் புதிய அழகு!
தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கை யான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் புறத்தோற்றத்தில் சிலபல மாறுதல்களைக் காட்டத் தவறுவதில்லை. அதனால், கர்ப்ப காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பராமரிக்க வேண்டியதும் அவசியம்.
மெலிந்திருந்த இடை பருத்து, உடல் முழுக்க பூசினாற் போன்ற ஒரு பூரிப்பு உண்டாகும். நகங்களும் கூந்தலும் வழக்கத்தைவிட நீளமாக வளரும். இது எல்லாமே கர்ப்பிணிக்குத் தனி அழகைக் கொடுக்கும். கர்ப்பமாக இருக்கும்போது, சில பெண்கள், புருவங்களைக் கூட ஷேப் செய்ய பயந்து கொண்டு, எந்த அழகு சிகிச்சையும் வேண்டாம் என ஒதுங்கியிருப்பார்கள். இன்னும் சிலருக்கோ, பார்லர் போகாமல் இருக்கவே முடியாது. மற்ற நாள்களில் எப்படியோ… கர்ப்பமாக இருக்கும் போது செய்து கொள்கிற ஒவ்வொரு அழகு சிகிச்சையிலும் அதீத எச்சரிக்கை அவசியம்.
கூந்தல்
கூந்தல் அடர்த்தியாக, அழகாக வளரும் என்பதால், இந்தக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் புதிய ஹேர் ஸ்டைல், புதிய ஹேர் கட்டை முயற்சி செய்யலாம்.
தலை முழுக்க கலரிங் செய்வதைத் தவிர்த்து, ஹைலைட்ஸ்’ எனப்படுவதைச் செய்து கொள்ளலாம். அதாவது கூந்தலின் சில பகுதிகளை மட்டும் கலரிங் செய்வது. இதற்கு உபயோகப்படுத்தப்படுகிற பொருள்கள் எதுவும் ஆபத்தற்றவை. மண்டைப் பகுதிக்குள் ஊடுருவாதவை. அதே நேரம், பெர்மிங், ஸ்ட்ரெயிட்டனிங் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற சிகிச்சைகளில் கெமிக்கல்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. தவிர, கர்ப்பத்தின் போது ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும், இந்த சிகிச்சைகளை பாதிக்கலாம். அதன் விளைவாக எதிர்பார்த்த பலன் கிடைக்காமல், கூந்தலின் அழகே மாறிப் போகும். மட்டுமின்றி, இந்த சிகிச்சைகள் கூந்தலின் நீளம், அடர்த்தியைப் பொறுத்து 4 முதல் 6 மணி நேரம் எடுப்பவை என்பதால், கர்ப்பிணிகளுக்கு முதுகுவலியை ஏற்படுத்தலாம்.
ஆயில் மசாஜ் செய்து கொள்வது, கர்ப்பிணிகளுக்கு இதமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருப்பதால், சருமம், அதன் மீள் தன்மையை இழக்கும். அதனால் சருமம் தளர்ந்து போனது போலவும், சுருக்கங்கள் விழுந்த மாதிரியும் உணர்வார்கள். கூந்தலுக்கும் நல்லது. பாட்டி காலத்து எண்ணெய் குளியல்தான்… பார்லர் போக முடியாதவர்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். எண்ணெய் குளியல் பிடிக்காதவர்கள், அதன் இன்றைய நவீன வடிவமான ஸ்பா சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். அதன் வாசனையும், மென்மையான மசாஜும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஸ்பா என்பது தண்ணீரை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சை, கெமிக்கல் கலப்பில்லை என்பதால், அதில் பக்க விளைவுகளும் இருக்காது.
சருமம்
ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகளின் சருமத்திலும், கூந்தலிலும் நிறைய மாற்றங்களைப் பார்க்கலாம். 3வது மாதத்திலிருந்து, அந்தப் பெண்ணின் சருமத்தில், குறிப்பாக நெற்றி, கன்னங்கள், கழுத்துப் பகுதிகளில் ‘மெலாஸ்மா’ எனப்படுகிற புள்ளிகள் தோன்றலாம். ஹார்மோன் மாறுதல்களினால், மெலனின் உற்பத்தி அதிகமாவதன் விளைவுதான் இது. வெயிலில் தலை காட்டினால், இன்னும் அதிகமாகும். எனவே, வெயிலில் போவதாக இருந்தால், எஸ்.பி.எஃப் 15 உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது பாதுகாப்பு. புள்ளிகளைப் போக்க நினைத்து, பிளீச் செய்யக்கூடாது. பொதுவாக இந்தக் கருந்திட்டுகள், பிரசவத்துக்குப் பிறகு காணாமல் போய் விடும்.
சிலருக்கு அதிகப்படியான எண்ணெய் சுரந்து, பருக்கள் வரலாம். எண்ணெய் இல்லாத ஃபேஸ் வாஷ் உபயோகித்து இதைக் கட்டுப்படுத்தலாம். ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்புகளைக் கொண்டு செய்யப்படுகிற பருக்களுக்கான சிகிச்சை’ இந்த நாள்களில் உதவும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருப்பதால், சருமம், அதன் மீள் தன்மையை இழக்கும். அதனால் சருமம் தளர்ந்து போனது போலவும், சுருக்கங்கள் விழுந்த மாதிரியும் உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், புரோட்டீன் ஃபேஷியல்’ செய்து கொள்ளலாம். இதில் எந்தவித கிரீமும் கிடையாது.
வெறுமனே பல்வேறு விதமான பருப்பு வகைகளை மாவாக அரைத்துச் செய்யப்படுகிற பாதுகாப்பான ஃபேஷியல்தான் இது.
பெரும்பாலும் மேக்கப் சாதனங்கள் எதுவும், கர்ப்ப காலத்தில் பிரச்னை தருவதில்லை. ஆனால், பருக்களுக்கான மேக்கப்போ, வேறு சருமப் பிரச்னைகளுக்கான மேக்கப்போ உபயோகிப் பவராக இருந்து, அதில் கெமிக்கல் கலவை இருப்பது தெரிந்தால் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு ரெடினாய்டு மற்றும் சாலிசிலிக் அமிலம் கலந்த பொருள்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. Noncomedogenic or nonacnegenic 67607 குறிப்பிடப்பட்டிருக்கிற மேக்கப் சாதனங்கள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானவை.
நகங்கள்
கர்ப்ப காலத்தில் நகங்கள் நீளமாகவும் உறுதியாகவும் வளரும். நகங்களை அழகுபடுத்திக் கொண்டே, அப்படியே கைகளுக்கு மெனிக்யூரும், கால்களுக்கு பெடிக்யூரும் செய்து கொள்ளலாம். மெனிக்யூர் என்பது கைகளுக்கான மசாஜ். பெடிக்யூர்… கால்களுக்கானது. கடைசி 3 மாதங்களில் செய்யப்படுகிற பெடிக்யூர், மிக, மிக கவனமாக செய்யப்படவேண்டியது. அந்த நாள்களில் ஏற்கனவே கால்களில் வீக்கம் இருக்கும். நுட்பம் தெரியாதவர்களிடம் கால்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் ஏதேனும் அழுத்தப்புள்ளிகளை அழுத்தி, தவறான மசாஜ் கொடுத்துவிட்டால், கால்களின் வீக்கம் அதிகமாகலாம். வலியும் எரிச்சலும் சேர்ந்து கொண்டு, தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம். எனவே, சரியான அழுத்தப் புள்ளிகள் தெரிந்த, சரியான நபரிடம் செய்து கொள்வதால், வீக்கமும் வடியும். நிம்மதியான தூக்கம் வரும்.
வாக்சிங்
கெமிக்கல் கலப்பில்லாத சிகிச்சை என்பதால், வாக்சிங், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மிக மிக மென்மையாக, வலியின்றி, இதைச் செய்ய வேண்டியதும் முக்கியம். கை, கால்களில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற, கர்ப்ப காலத்தில், அதற்கான கிரீம்கள் உபயோகிப்பது நல்லதல்ல.
- Dec 21, 2023