மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்திற்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் ஆகிய இரண்டுமே பெண்களின் இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் மருத்துவத் துறைகள். இருப்பினும், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் ஆகிய இரண்டும் வெவ்வேறு நோக்கம் மற்றும் நடைமுறை முறைகளைக் கொண்ட இரண்டு வேறுபட்ட மருத்துவத் துறைகளாகும். மகப்பேறியல் கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மகளிர் மருத்துவம் பெண்களின் ஒட்டுமொத்த இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. பெரும்பாலும், மருத்துவமனைகள் இந்த துறைகளை OB-GYN என்று ஒரே துறையாக இணைக்கின்றன. இருப்பினும், இவற்றின் வேறுபாடுகளை நாம் புரிந்து கொண்டால் நமக்குத் தேவையான நிபுணரை நாட உதவும்.
மகப்பேறியல் - கர்ப்பத்தை கையாள்வது
மகப்பேறியல் என்பது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் பிறக்கப்போகும் குழந்தையைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவத்துறை ஆகும். மகப்பேறு மருத்துவர் பெண்களின் கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் ஆகியவற்றை கவனித்துக் கொள்வார். வழக்கமான மற்றும் அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை கையாள மகப்பேறியல் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மகப்பேறு மருத்துவத்தின் நோக்கம்
மகப்பேறியல் துறை பின்வருவனவற்றில் கவனம் செலுத்துகிறது:
மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு - மகப்பேறு மருத்துவர் பெண்ணின் கர்ப்ப காலம் முழுவதும் தாய் மற்றும் பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியத்தை கண்காணிக்கிறார். இதில் செய்யப்படும் வழக்கமான சோதனைகளில், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இரத்த பரிசோதனைகள் மற்றும் கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா போன்ற நிலைகளுக்கான ஸ்கிரீனிங் ஆகியவை அடங்கும். தாயை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அதே வேளையில், கருவின் வளர்ச்சியையும் மருத்துவர் உறுதி செய்கிறார்.
பிரசவம் மற்றும் மகப்பேறு – பிரசவம் மற்றும் குழந்தைப் பிறப்பில் மகப்பேறு மருத்துவர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். பிறப்புறுப்பு பிரசவமாக இருந்தாலும் சரி அல்லது சிசேரியன் செயல்முறையாக இருந்தாலும் சரி, பிரசவத்தின்போது தாயுடன் கூட நின்று அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரிசெய்து, சுகப்பிரசவம் ஆக அவர்களுக்கு ஆலோசனை தந்து உதவுகின்றனர்.
பிரசவத்திற்குப் பின் பராமரிப்பு - மகப்பேறு மருத்துவரின் பணி ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவுவதோடு முடிவடைவதில்லை. பிரசவத்திற்குப் பின் தாயின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதிலும் அவர் உதவுகிறார். புதிதாக பிரசவமான தாய்மார்கள் பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு 6 வாரங்கள் வரை தங்கள் மகப்பேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். தாயின் கருப்பை மற்றும் மார்பகங்களை மருத்துவர் பரிசோதிப்பார். தொற்று நோய் ஏற்பட்டிருந்தால் அதைப் போக்கவும், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வை நீக்கவும் மருத்துவர் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவு வழங்குவார். தாய்ப்பாலூட்டுதல் மற்றும் கர்ப்பத்திற்குப் பிந்தைய பிறப்புக்கட்டுப்பாடு பற்றிய ஆலோசனைகளையும் அவர் வழங்குவார்.
மகளிர் மருத்துவம் - பெண்களின் இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தைப் பராமரித்தல்
மகளிர் மருத்துவவியல் என்பது கருப்பை, கருமுட்டை, ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு உட்பட பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் பல்வேறு நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறது. மாதவிடாய் தொடக்கம் (ப்யூபர்ட்டி), மாதவிடாய்க் காலங்கள் (மென்ஸ்ட்ருவேஷன்), பெண் கருவுறுதல், மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்), பாலுறவு மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் புற்றுநோய் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது இந்தத் துறையாகும். மகளிர் மருத்துவ கவனிப்பில் செய்யப்படும் உடல் பரிசோதனைகளில் - இடுப்புப் பரிசோதனைகள், பேப் ஸ்மியர் போன்ற புற்றுநோய் ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
மகளிர் மருத்துவத்தின் நோக்கம்:
மகளிர் மருத்துவத் துறையில் பின்வருவன அடங்கும்:
வழக்கமான பரிசோதனைகள் - வழக்கமான சோதனைகள் செய்வதன் மூலம் மகப்பேறு மருத்துவ நிபுணர்களால் அசாதாரண நிலைகளை கண்டறிந்து குணப்படுத்த முடியும். இடுப்பு பரிசோதனை, மார்பக பரிசோதனை மற்றும் பாப் ஸ்மியர் ஆகியவை இதில் அடங்கும். புற்றுநோய்க் கட்டிகள், நோய்த்தொற்றுகள் மற்றும் சீர்குலைவுகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த இது செய்யப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மகளிர் மருத்துவ நிபுணரை முறையாகச் சந்திப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வருடாந்திர அடிப்படையில் சோதனைகள் செய்து கொள்வது சிறப்பானது.
இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் - இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியம் என்பதில் ஒழுங்கற்ற அல்லது அதிகப்படியான மாதவிடாய், வலிமிகுந்த மாதவிடாய், இடுப்பு வலி, பிறப்புறுப்பில் அரிப்பு அல்லது துர்நாற்றம் மற்றும் பிறப்புறுப்பில் அசாதாரண கட்டிகள் அல்லது கொதிப்புகள் போன்றவை அடங்கும். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், எண்டோமெட்ரியோசிஸ், HPV, ஈஸ்ட் தொற்று, மாதவிடாய் மற்றும் கருப்பைச் சரிவு ஆகியவற்றையும் கண்டறிந்து சிகிச்சை செய்யப்படலாம். கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மற்றும் பிறப்புறுப்புப் புற்றுநோய் போன்றவற்றையும் புற்றுநோயியல் நிபுணருடன் இணைந்து மகளிர் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
அறுவைசிகிச்சைகள் - மகளிர் நோய் கட்டிகளை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவதில் மகப்பேறு மருத்துவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். கருப்பை நீக்கம், கருப்பை நார்த்திசுக்கட்டி மற்றும் நீர்க்கட்டி அகற்றுதல் மற்றும் எண்டோமெட்ரியல் ஒட்டுதல்களை அகற்றுதல் போன்ற செயல்முறைகளையும் அவர்கள் செய்கின்றனர்.
ஹார்மோன் மேலாண்மை - மாதவிடாய், கருவுறுதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தை பாதிக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை மகப்பேறு மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர். ஹார்மோன் மேலாண்மை, உணவு மற்றும் வளர்சிதை மாற்றத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி PCOS போன்ற நிலைமைகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மகப்பேறு மருத்துவர்கள் இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் எந்த வகையான ஹார்மோன் கருத்தடைகளைத் தொடங்குவதற்கு முன்பும் அவர்களுடன் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
வருமுன் காத்தல் - பெண் இனப்பெருக்க அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து முன்னதாக தற்காத்துக் கொள்ளும் தடுப்பு பராமரிப்பில் மகப்பேறு மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பாலியல்-ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், HPV மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான வழக்கமான ஸ்கிரீனிங் சோதனைகள் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்துவிடுவதால், அதனை குணப்படுத்துவது எளிதாகிறது.
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் ஆகியவை இரண்டு வேறுபட்ட மருத்துவத் துறைகளாக இருந்தாலும், அவை “பெண்களின் ஆரோக்கியத்தை பராமரித்தல்” என்ற ஒரு பொதுவான குறிக்கோளைக் கொண்டுள்ளன. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் பல்வேறு கட்டங்களில் மகப்பேறியல் கவனம் செலுத்துகிறது; மகளிர் மருத்த்துவம் ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் அவளது இனப்பெருக்க அமைப்பு மற்றும் உடல் மற்றும் மன நலத்தை உறுதி செய்கிறது. இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட்டு, பெண்களின் தனிப்பட்ட சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் தொடர்ச்சியான கவனிப்பை வழங்குகிறார்கள். இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது சரியான மருத்துவ கவனிப்பை நாட உதவுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்கவும் உதவுகிறது.
- Dec 03, 2024