மருத்துவத் துறையில் "கோல்டன் ஹவர்" என்றால் என்ன
மருத்துவத் துறையில் "கோல்டன் ஹவர்" என்ற சொல் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. துயர சம்பவங்களினால் நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு 60 நிமிட காலத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது முக்கியம். இந்த முக்கியமான காலக்கெடுவிற்குள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுடன், அவர்களின் உடல்சார் செயல்பாடுகளும் பழைய நிலைக்கு மீண்டு வர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்திற்குள் நோயாளிகள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். "கோல்டன் ஹவர்" என்ற கருத்து முதலாம் உலகப் போரில் பிரெஞ்சு இராணுவத்தின் தரவுகளிலிருந்து வந்தது. துயர சம்பவமான போரின் காரணமாக ஏற்பட்ட காயத்திற்குப் பின்பான ஒரு மணி நேரத்திற்குள் போர் வீரர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், அவர்களின் இறப்பைத் தடுத்து உயிரை மீட்க முடிந்தது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாத பெரும்பாலான வீரர்கள் சில வாரங்களுக்குள் இறந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் சில மருத்துவர்கள் "கோல்டன் ஹவர்" காலகட்டத்தை விமர்சித்துள்ளனர்; 60 நிமிடங்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுவோருக்கு உயிர்வாழும் வாய்ப்புகள் குறைகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது அவர்களின் கருத்து. இருப்பினும், உடனடியாக செயல்பட்டு நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிப்பது முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
“கோல்டன் ஹவர்” காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள சவால்கள்
துயர சம்பவங்களினால் ஏற்பட்ட காயங்களுக்கு ஆளான நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், உடனடியாக செயல்பட்டு சிகிச்சையளிப்பதில் பல சவால்கள் உள்ளன:
புவியியல்-ரீதியான சவால்கள் - நோயாளிகளால் 20 முதல் 30 நிமிடம் வாகனம் ஓட்டும் தூரத்திற்குள் ஒரு நல்ல மருத்துவமனையை அணுக முடியாமல் போகலாம். நோயாளியை அணுக ஆம்புலன்ஸ் செல்ல வேண்டிய இடத்தை அடைவதில் சிரமங்கள் இருக்கலாம். இதனால் நோயாளியை மீட்பதிலும், தொடர்ந்து சிகிச்சையளிப்பதிலும் சிரமம் மற்றும் தாமதம் ஏற்படலாம்.
உள்கட்டமைப்பு வரம்புகள் - நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதற்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம். ஆம்புலன்சில் போனால் கூட, போக்குவரத்து நெரிசல்கள் இருந்தால் நோயாளிகள் மருத்துவமனையை அடைய எடுக்கும் நேரத்தை அதிகமாக்கும். மேலும், சில சமயம் மருத்துவமனையின் அவசரகால சேவைகள் பிரிவில் போதுமான மருத்துவர்களும் வசதிகளும் கிடைக்கவில்லை என்றால் இது மருத்துவ கவனிப்பு மற்றும் உடனடி சிகிச்சையை தாமதப்படுத்தலாம்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு - விபத்து அல்லது துயர சம்பவங்களினால் காயம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி போதுமான அளவு விழிப்புணர்வு மற்றும் புரிதல் பொது மக்களிடையே இல்லை. நோயாளியின் அருகில் உள்ளவர்கள் பெரும்பாலும் விபத்து/சம்பவத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் போகலாம், அதனால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்காமல் இருக்கலாம் அல்லது வேறு மருத்துவ உதவியை நாடாமல் போகலாம்.
“கோல்டன் ஹவர்” எதிர்கொள்ளக்கூடிய சில சம்பவங்கள் இதோ:
சாலை விபத்துகளில் "கோல்டன் ஹவர்"
சாலைப் போக்குவரத்து விபத்துகளில், விபத்து ஏற்பட்ட முதல் சில நிமிடங்களில் தலையிட்டு துரிதமாகச் செயல்படுவது உயிர் பிழைக்கும் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும். விபத்து நடந்த இடத்தில் நோயாளியின் காற்றுப்பாதை, சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் ஒழுங்காக இருப்பதை உறுதிசெய்து கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும். விபத்து நடந்த இடத்திலேயே, சில நிமிடங்களுக்குள் முதலுதவி செய்வது முக்கியம். விபத்து நடந்த இடத்தில் திறமையாக முதலுதவி செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றால், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது.
பக்கவாத நோயாளிகளுக்கு "கோல்டன் ஹவர்"
பக்கவாதம் என்பது மூளைக்கு இரத்த ஓட்டத்தை துண்டிக்கச் செய்யும் ஒரு தீவிரமான நிகழ்வாகும். இது மூளைக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதுடன், மூளை செல்கள் இறப்பதற்கும் வழிவகுக்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடனடி சிகிச்சை பெறாவிட்டால் கடுமையான மனநல குறைபாடுகளும் ஏற்படலாம். தாமதிக்கும் ஒவ்வொரு மணி நேரமும், ஒரு பக்கவாத நோயாளி மில்லியன் கணக்கான மூளை செல்களை இழக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும். பக்கவாதம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் திசு பிளாஸ்மோஜன் ஆக்டிவேட்டர்களை (TSA) பெற வேண்டும். இந்த மருந்து, கட்டிகளைக் கரைத்து மூளைக்கு இரத்த ஓட்டத்தை மீண்டும் செயல்படுத்துகிறது. ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதை எப்படி அடையாளம் காணுவது என்றும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவு தேவை.
மாரடைப்பு நோயாளிகளுக்கான "கோல்டன் ஹவர்"
ஒருவரின் இதய தசைகளுக்கு செல்லும் இரத்தத்தில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இது இதய தசைகளைக் கொல்வதில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை பாதித்து, அந்த செல்களைக் கொல்லும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவசரகால சிகிச்சை மிக முக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு இதய நோயாளிக்கு சரியான மருந்தை எவ்வளவு சீக்கிரம் வழங்க முடியுமோ அந்த அளவுக்கு நலம். நோயாளியின் பல்வேறு உடல் அமைப்புகளும் உறுப்புகளும் செயலிழப்பதை தடுக்க இது உதவும், அத்துடன் அவர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பையும் கணிசமாக அதிகரிக்க உதவும். மாரடைப்பின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையை விரைவாகப் பெற உதவும்.
முடிவாக சில வார்த்தைகள்…
“கோல்டன் ஹவர்" என்ற சொல் மருத்துவ உலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாலை விபத்துக்காயங்கள், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற துயரமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உடனடி மருத்துவக் குறுக்கீடு மிகவும் முக்கியமானது. 60-நிமிட காலக்கெடு குறித்து சில விவாதங்கள் இருந்தாலும், கூடியவிரைவில் சிகிச்சையை தொடங்குவது நோயாளி உயிர்பிழைக்கும் வாய்ப்பைக் கணிசமாக மேம்படுத்துகிறது மற்றும் நீண்டகால உடல்நலச் சிக்கல்களைக் குறைக்கிறது. மருத்துவமனைகள் தங்கள் அவசரகால செயல்பாட்டு அமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன், பொதுமக்களுக்கு சிறந்த முறையில் கல்வியறிவும் விழிப்புண்ரவும் ஏற்படுத்துவது இந்த ஆபத்தான சூழ்னிலைகளை கையாள பெரிதும் உதவும்.
- Feb 04, 2025