உண்மை என்ன? தாய்ப்பால்.
நம் சமூகத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் பற்றி பல தவறான கருத்துக்களும் கட்டுக்கதைகளும் நிலவுகின்றன. அவற்றைப் பற்றிய உண்மைகளை அறிந்து தெளிவு பெறுவது அவசியம்.
தவறான கருத்துகள்
1. “அதிக பால் சுரக்க நீங்கள் நிறைய பால் குடிக்க வேண்டும்”
இது உண்மையல்ல. நீங்கள் போதுமான அளவில் எடுத்துக்கொள்ளும் எந்த வகையான சமச்சீர் உணவும் திரவமும் போதுமான பால் சுரப்புக்குப் போதுமானது. தாய்ப்பால் சுரப்பும் தரமும் தாயின் பால் உட்கொள்ளலைப் பொறுத்து மாறுவதில்லை.
2. “சிறிய மார்பகங்கள் போதுமான அளவு பால் சுரக்காது”
போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பது மார்பக அளவைப் பொறுத்தது அல்ல. அது மார்பகத்தின் பால் சுரப்பிகளின் செயல்பாட்டைப் பொறுத்தது. தாய்ப்பால் என்பது மார்பகத்தில் உள்ள சிறப்புச் சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது.
3. “தாய்ப்பால் கொடுக்கும்போது சில உணவுகளை நிறுத்த வேண்டும்”
இல்லை! தாய்ப்பால் கொடுக்கும்போது உங்களுக்குப் பிடித்த பெரும்பாலான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட உணவைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட்டால், ஒவ்வொரு முறையும் சிறிய அளவில் சாப்பிட்டு, அது உங்கள் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படுத்துகிறதா என்று கவனியுங்கள். அப்படி ஏதேனும் பாதிப்பு தெரிந்தால் மட்டுமே அந்த உணவைத் தவிர்க்கலாம்.
4. “முந்தைய குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை, இந்த முறையும் வெற்றிகரமாகத் தாய்ப்பால் கொடுக்க முடியாது”
முந்தைய குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றாலும், இந்தக் குழந்தைக்கு வெற்றிகரமாகத் தாய்ப்பால் கொடுக்க முடியும். நம்பிக்கையுடன் இருங்கள்!
கட்டுக்கதைகள்
1. “பிறந்த முதல் 3 அல்லது 4 நாட்களில் பால் போதுமானதாக இருக்காது”
இல்லை… இது உண்மையல்ல. பிரசவத்திற்குப் பிறகு முதல் சில நாட்களில் சுரக்கும் சீம்பால் கெட்டியாகவும், ஒட்டும் தன்மையுடனும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். குறைவான அளவில் (30-90மி.லி) சுரக்கப்பட்டாலும், புத்திளம் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகளை நிறைவேற்ற அந்த சீம்பால் போதுமானது. சீம்பாலில் வைட்டமின் A மற்றும் K நிறைந்துள்ளது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன், தொற்றுநோய்களுக்கு எதிரான முதல் பாதுகாப்பு அரணாக இதுவே செயல்படுகிறது.
2. “வெப்பமான வானிலையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்குக் கூடுதல் தண்ணீர் தேவை”
இல்லை… இது உண்மையல்ல. தாய்ப்பாலிலேயே குழந்தைக்குத் தேவையான அனைத்து நீரும் உள்ளது. தாய்ப்பாலில் நீர்தான் மிக அதிக அளவில் உள்ளது, அதில்தான் மற்ற ஊட்டச்சத்துக்கள் கரைந்துள்ளன. வெப்பமான, ஈரப்பதமான காலநிலையிலும் கூட குழந்தைகளின் நீர்த் தேவையை நிவர்த்தி செய்ய தாய்ப்பாலிலுள்ள நீரே போதுமான அளவு பூர்த்தி செய்கிறது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
3. “ஒரு வருடத்துக்குப் பிறகு, தாய்ப்பால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கிறது”
இல்லை… இது உண்மையல்ல. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தாய்ப்பால் வழங்குகிறது. அதற்குப் பிறகும் தாய்ப்பால் மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்குகிறது. ஆனால், இந்த நேரத்தில் துணை உணவும் தேவைப்படுகிறது. ஒரு தாய் தனது குழந்தைக்கு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.
4. “ஒவ்வொரு முறை குழந்தைக்குப் பால் ஊட்டும் முன்பும் மார்பகக் காம்புகளைக் கழுவ வேண்டும்”
இல்லை… இது உண்மையல்ல. மார்பகம் தானாகவே தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் எண்ணெய்களைச் சுரக்கிறது. ஒவ்வொரு முறையும் கழுவுவது இந்தப் பாதுகாப்பு எண்ணெய்களை நீக்கிவிடும். மேலும், கழுவும் நீரின் தூய்மை கேள்விக்குரியதாக இருந்தால், அது தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
5. “பால் சுரப்பு மார்பகத்தின் அளவுடன் நேரடியாகத் தொடர்புடையது”
இல்லை… இது உண்மையல்ல. பெரிய அல்லது சிறிய மார்பகங்களின் அளவுக்கும், அவை சுரக்கும் பாலின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குழந்தை அதிக அளவு பால் குடிக்கும்போது, அதற்கேற்ப அதிக பால் சுரக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. “பல பெண்களுக்குப் போதுமான பால் சுரப்பதில்லை”
இல்லை… இது உண்மையல்ல. இது பொதுவாக துணை உணவு கொடுப்பதற்கோ அல்லது தாய்ப்பால் ஊட்டுதலை முன்கூட்டியே நிறுத்துவதற்கோ காரணமாகக் கூறப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகான முதல் சில நாட்களில் தாய்மார்கள் தங்கள் பால் சுரப்பு அளவைப் பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்கள். குழந்தை தேவைக்கேற்ப அடிக்கடி பால் குடிக்கும்போதும், தாய் நம்பிக்கையுடன் இருக்கும்போதும் கிட்டத்தட்ட அனைத்துத் தாய்மார்களுமே தேவைக்கு ஏற்ற அளவு பாலைச் சுரக்கச் செய்ய முடியும்.
7. “பாட்டில் மூலம் பால் கொடுப்பது தாய்ப்பால் ஊட்டுவதை விட எளிது”
இல்லை… இது உண்மையல்ல. பாட்டில் பால் தயாரிப்பதற்கு பல படிகள் உள்ளன… பாட்டிலை கிருமி நீக்கம் செய்தல், பால் மாவைத் தயாரித்தல், சரியான வெப்பநிலைக்குக் காத்திருத்தல்… இப்படி.
தாய்ப்பால் ஊட்டுவதோ மிக எளிமையானது, உடனடியானது. தாய்ப்பால் எளிதில் ஜீரணமாவதால் அடிக்கடி பால் கொடுக்க வேண்டியிருந்தாலும், அது பாட்டில் பால் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை விட சிறந்தது.
8. “இரவில் பால் ஊட்டுவது பல் பிரச்னைகளை ஏற்படுத்தும்”
இல்லை… இது உண்மையல்ல. தாய்ப்பால் பற்சிதைவை ஏற்படுத்துவதில்லை. மாறாக, பாட்டில் மூலம் செயற்கைக் காம்புகள் வழியாக பால் கொடுக்கும்போது, பால் வாயின் முன் மற்றும் நடுப்பகுதியில் தேங்குவதால் பற்சிதைவு ஏற்படலாம்.
9. “தாய்ப்பால் ஊட்டுதல் மார்பகங்களின் வடிவத்தைக் கெடுக்கிறது”
இல்லை… இது உண்மையல்ல. மார்பக வடிவ மாற்றங்கள் கர்ப்ப காலத்திலேயே தொடங்கிவிடுகின்றன. தாய்ப்பால் ஊட்டுதல் மார்பகங்களின் வடிவத்தைப் பாதிப்பதில்லை. மார்பக வடிவம் பரம்பரை, உடல் எடை ஏற்ற இறக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறதே தவிர தாய்ப்பால் ஊட்டுதலால் அல்ல.
10. “குழந்தைக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்”
இல்லை… இது உண்மையல்ல. குழந்தையின் குடல் தொற்றுக்கான சிறந்த மருந்தே தாய்ப்பால்தான். விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் போது குழந்தைக்குத் தேவைப்படும் மிகச் சிறந்த ஊட்டச்சத்து தாய்ப்பாலே ஆகும்.
கிறிஸ்டி எஸ்
குழந்தைப் பிறப்பு கல்வியாளர், பாலூட்டுதல் & IYCF ஆலோசகர், சமூக சேவகர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி
- Jan 17, 2025